பதிவு செய்த நாள்
23
ஜூன்
2015
10:06
நாதுலா (திபெத்): சிக்கிம் மாநில எல்லையில் இருந்து சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட திபெத்தின் நாதுலா கணவாய் வழியே, முதன் முதலாக இந்திய யாத்ரீகர்களின் கைலாஷ் மற்றும் மானசரோவர் யாத்திரை, நேற்று துவங்கியது. வரலாற்று சிறப்புமிக்க, இந்த புதிய வழியிலான பயணத்திற்கு அடித்தளமிட்டவர், பிரதமர் மோடி. அண்மையில், அவர் பீஜிங் சென்ற போது, சீன அதிபர், ஜி ஜின்பிங் உடன் இணைந்து, இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, புதிய பாதையில் கைலாஷ் - மானசரோவர் பயணம், ஜூன் 1 முதல் துவங்கும் என்றார். அதன்படி, இந்தியாவில் இருந்து, 38 பயணிகள் கொண்ட குழு, சிக்கிம் எல்லையை கடந்து, நேற்று நாதுலாவில் கால் வைத்தது. அவர்களை, சீன அரசு அதிகாரிகள், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இக்குழு, பேருந்து மூலம், கயிலாயநாதரையும், மானசரோவரையும் தரிசித்து விட்டு, 11 நாட்களில், மீண்டும் நாதுலா திரும்பும்.
இப்பயணத்திற்காக அமைக்கப்பட்ட புதிய சாலையை, திபெத் சுயாட்சி பிராந்தியத்தின் துணைத் தலைவர் டன் மிங் ஜன் திறந்து வைத்து பேசியதாவது:இந்தியர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து, மருத்துவம், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. இது, இந்திய யாத்ரீகர்களுக்கு, சுகமான பயணமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார். கைலாஷ் மற்றும் மானசரோவர் செல்ல, ஆண்டுக்கு, தலா, 60 பேர் கொண்ட, 18 குழுக்களை, மத்திய அரசு, அனுமதிக்கிறது. உத்தரகண்ட் மாநிலம், லிபுலேக் கணவாய் வழியாக பயணி கள் செல்கின்றனர். இப்பாதை வழியிலான யாத்திரைக்கு, ஒருவருக்கு, 1.80 லட்சம் ரூபாய் செலவாகும். புதிய பாதையில், இதை விட, 30 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலவாகும் என தெரிகிறது.