ஆவணி மாதம் மாதங்களில் முதன்மையானது என்பர். கேரளத்தில் ஆவணியே (சிம்ம மாதம்) கொல்லம் ஆண்டின் (மலையாள புத்தாண்டு) முதல் மாதமாகும். ஏனென்றால் இம்மாதத்தில் தான் முழுமுதற்கடவுளான விநாயகப்பெருமானுக்குரிய விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கேரளத்தின் முக்கிய விழாவான ஓணம், புத்தாண்டு மாதத்தில் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இம்மாதத்தில் நவக்கிரக முதல்வரான சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சி பெறுகிறார். கொடியவர்களுக்கும் அருளும் வேதாரண்யம் விநாயகர் வேதாரண்யம் வேதீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கும் விநாயகரை பிரம்மஹத்தி விநாயகர் என்பர். இந்த உலகத்திலேயே கொடுமையானது பசுவைக் கொல்வது, அதற்கடுத்தது பிராமணர்களைக் கொலை செய்வது, நம்பிக்கை துரோகம் செய்வது, பெண்களை ஏமாற்றியோ வலுக்கட்டாயமாகவோ கெடுப்பது. இத்தகைய கொடிய செயல்களெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்தச் செயல்களைச் செய்த ஒருவர் மனம் திருந்தினாலும், மனசாட்சி உறுத்தினாலும் பாவங்கள் தீராது. அவர் இறந்தபின்னும் அது பின்னால் தொடரும். மறுபிறப்பெடுத்தாலும், துன்பம் விரட்டும். இத்தகைய கொடியவர்களுக்கும் அருள்பாலிப்பவராக விளங்குகிறார் இவர். இவரிடம் மன்னிப்பு கேட்டு, தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியும் செய்து, அதை அவர்கள் ஏற்றுக்கொண்டால் தோஷம் விலகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்தக் கோயில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து வேதாரண்யத்திற்கு நேரடி பஸ் உண்டு. இந்தக் கோயிலில் தான் நாவுக்கரசர் பாட மூடிக்கிடந்த கதவு திறந்தது. சம்பந்தர் பாட அந்தக் கதவு மூடிக்கொண்டது. புனிதமான இந்தக் கதவுக்கு வெள்ளிக்கவசம் சாத்தியுள்ளனர்.