பதிவு செய்த நாள்
30
ஜூன்
2015
11:06
திருப்பூர்: திருப்பூர், குளத்துப்புதூர் மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் அரசு-வேம்பு திருக்கல்யாண உற்சவம், நேற்று நடைபெற்றது.கொங்கு சோழர் ஆட்சி காலத்தில், ஆண்டிபாளையம் குளம் வெட்டப்பட்டபோது, அப்பகுதியில் வரதராஜ பெருமாள் கோவிலும், வழிப்போக்கர்கள் ஓய்வெடுப்பதற்கு மடமும் அமைக்கப்பட்டது. பாழடைந்த நிலையில் இருந்த இக்கோவிலை, நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். வருவாய்த்துறை ஆய்வில், கோவிலுக்கு பட்டா வழங்கியிருந்தது தெரியவந்தது. அதன்பின், பக்தர்களின் முயற்சியால், சின்னதாக கோவில் அமைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, கோவில் வளாகத்தில் இருந்த அரசு, வேம்பு மரங்களை சுற்றிலும் மேடை அமைத்து, அரச மர பிள்ளையார் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, மகாகணபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மகா கணபதி சன்னதி கும்பாபிஷேகம், அரசு மற்றும் வேம்பு மரங்கள் திருக்கல்யாண உற்சவம், நேற்று நடைபெற்றது.நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, முதல்கால யாக பூஜை, நேற்று காலை, 5.00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தன. 6:45 மணியளவில், மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம், தொடர்ந்து, அரசு-வேம்பு திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது.