பழநி: பழநி திருஆவினன்குடிகோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் முதலமைச்சர் அனுமதிக்க காத்திருக்கிறது.தமிழகத்தில் அதிக வருமானமுள்ள பழநி மலைக்கோயிலுக்கு, சாதாரண நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்காக மலைக்கோயிலில் காலை 8 முதல் இரவு 10 மணிவரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இதைப்போலவே பெரியநாயகியம்மன் கோயில், இடும்பன் கோயில்களில் பகல் 12 மணிக்குமேல் அன்னதானம் வழங்கப்படுகிறது.இந்நிலையில் மூன்றாம்படைவீடு என அழைக்கப்படும் திருஆவினன்குடி குழந்தைவேலாயுதசுவாமி கோயிலில் அன்னதான திட்டம் துவங்க திட்டமிடப்படது. அதற்கான சமையல் பாத்திரங்கள், மேஜை, இருக்கைகள் வாங்கப்பட்டுள்ளது. இருப்பினும் திட்டத்தை துவக்குவதற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிற்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். திருஆவினன்குடிகோயிலும் அன்னதான திட்டத்தை விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ திருஆவினன்குடி கோயிலில் முதலமைச்சரின் அன்னதான திட்டம் விரைவில் செயல்படுத்த ஏற்பாடுகள் நடக்கிறது. மேலிட அனுமதி கிடைத்ததும் திட்டம் துவங்கப்படும்,”என்றார்.