பதிவு செய்த நாள்
30
ஜூன்
2015
06:06
அவர் உங்களுக்கு என்ன சொல்கிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்கிறது வேதவசனம் (யோவான் 2:5) தாய்மரியாளுடன், இயேசுவும் அவருடைய சீடர்களும் கானா என்ற ஊரில் ஒரு திருமணத்திற்கு சென்றனர். எபிரேயர்களின் திருமணச் சடங்கில் திராட்சை ரசம் பரிமாறுவது வழக்கம். தோட்டத்தில் இருந்து கொண்டு வந்த திராட்சை பழங்களை நீரில் நன்றாக கழுவி, பெரிய தொட்டிகளில் இட்டு கால்களால் மிதிப்பர். அப்போது பெருகும் ரசத்தை, சிறிய கால்வாய் வழியாக, தொட்டிகளில் சேகரிக்கப்பர். சக்கையை செக்கில் ஆட்டி, அதிலும் ரசத்தை பிழிந்தெடுப்பர். தொட்டிகளில் சேகரித்த ரசத்தை பெரிய கல் ஜாடிகளில் ஊற்றுவர். புளிப்பதற்கு முன்பாக உபயோகப்படுத்தி விடுவர்.
புளித்தால், அது மதுபானமாக மாறி விடும். இப்படி மதுவாக குடிக்கும் சிலரும் உண்டு. திருமண வீட்டிற்கு, எதிர்பார்த்ததை விட அதிகமானவர்கள் வந்து விட்டதால், திராட்சை ரசத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டது. மணவீட்டார் மரியாளிடம் இந்த விஷயத்தை தெரிவித்தனர். உடனே திராட்சை ரசம் பரிமாறுவோரை அழைத்த இயேசு, ஆறு கல் ஜாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள் என்றார். எபிரேயர்களுக்கு எண்களில் ஆறு மிகவும் முக்கியத்துவம் பெற்றது. ஆறுநாட்களில் உலகத்தைப் படைத்த தேவன், ஏழாம் நாளில் ஓய்வு எடுத்ததாக ஆதியாகமம் முதலாம் அதிகாரம் கூறுகிறது. தேவன் மனிதனுக்காக உழைத்த ஆறு நாட்களை நினைவுபடுத்தும் வகையில், ஆறு கல் ஜாடிகளை எபிரேயர்கள் பயன்படுத்துவர். ஜாடியில் ஊற்றிய தண்ணீர், திராட்சை ரசமாக மாறியது. இது வேலைக்காரர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இயேசு செய்த முதல் அற்புதம் இதுவே. தேவன் சொல்வதை முழுமையாக நம்பினால், அற்புதங்களை வாழ்வில் காண முடியும். விஞ்ஞான அறிவு, சிந்தித்து முடிவெடுக்கும் யோசனை அல்லது வேறு விதமான உதாரணங்கள், ஆராய்ச்சி முடிவு ஆகியவற்றுக்கும் ஆன்மிகத்துக்கும் சம்பந்தம் இல்லை. இயேசு செய்த அற்புதத்தின் காரணமாக, அவருடைய சீஷர்களும் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள் என்கிறது வேதவசனம். (யோவான் 2;11) தேவனின் வார்த்தையை நம்பினால் நன்மை நமக்குத் தான்!