பதிவு செய்த நாள்
01
ஜூலை
2015
11:07
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் நடந்த, பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மேட்டுப்பாளையம், வ.உ.சி., வீதி, குலாலர் தெருவில் பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் குண்டம் விழா கடந்த, 16ம் தேதி கணபதி பூஜை, தன்னாசி அப்பன், முனீஸ்வரர் பூஜை மற்றும் பூச்சாட்டுடன் துவங்கியது. 29ல் ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து, காவல் தெய்வங்களுக்கு பூஜை செய்து, குண்டம் திறக்கப்பட்டது. நேற்று காலை, 6:00 மணிக்கு சுப்ரமணியர் சுவாமி கோவில் அருகேவுள்ள பவானி ஆற்றிலிருந்து, அம்மன் சுவாமி அழைத்து வரப்பட்டது. கோவில் முன், 15 நீளம், மூன்று அடி அகலத்தில் அமைத்திருந்த குண்டத்திற்கு தலைமை பூசாரி சண்முகம் பூஜை செய்து, பூப்பந்து உருட்டி விட்டு, முதலில் குண்டம் இறங்கினார். தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலையில் மாவிளக்கு, பால்குடம் எடுக்கப்பட்டது. இன்று மஞ்சள் நீராட்டும், இரவு அபிஷேக பூஜையும் நடைபெறுகிறது.