பதிவு செய்த நாள்
11
ஜூலை
2015
11:07
அந்தியூர், :அந்தியூர் அடுத்த புதுப்பாளையத்தில் உள்ள குருநாத ஸ்வாமி கோவில், பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோவில். தமிழகத்திலேயே, மாடுகள் மற்றும் குதிரை சந்தைக்கு புகழ் பெற்ற திருவிழாவாகும். ஆண்டு தோறும், ஆடி மாதம் தேர்த்திருவிழாவுடன், மாடு மற்றும் குதிரை சந்தை, ஒரு வார காலம் நடக்கும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கர்நாடக மாநிலத்தில் இருந்தும், ஆயிரக்கணக்காண கால்நடைகளை விற்பனைக்காகவும், கண்காட்சிக்காகவும் வியாபாரிகளும், விவசாயிளும் கொண்டு வருவர். குறிப்பாக, குதிரைகளை வாங்கிச் செல்ல, வெளி மாநில வியாபாரிகள் வந்து செல்வர். இங்கு நடக்கும் சந்தைக்கு கொண்டு வரப்படும் கால்நடைகளுக்கு, குடிநீர் ஆதாராக திகழ்வது, கோவில் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ஏரியாகும். கடந்த, மூன்று ஆண்டுகளாக, கடும் வறட்சியால், இந்த ஏரி வற்றிய நிலையில் காணப்பட்டது. இதனால், கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக, பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பில், தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு, விலை கொடுத்து தண்ணீரை லாரிகளில் கொண்டு வந்து, தொட்டிகளில் ஊற்றி, குடிநீர் தேவையை பூர்த்தி செய்தனர். கடந்த ஆண்டு பெய்த மழையால், அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி, அதன் மூலம் இந்த ஏரிக்கு, நீர் வரத்து ஏற்பட்டு, தற்போது தண்ணீர் ஓரளவு உள்ளது. இதனால், இந்த ஆண்டு குருநாதஸ்வாமி கோவில் கால்நடை சந்தைக்கு கொண்டு வரப்படும் மாடுகள் மற்றும் குதிரைகளுக்கு போதிய நீர் ஆதாரம் உள்ளது, அப்பகுதியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.