பதிவு செய்த நாள்
14
ஜூலை
2015
10:07
திருப்பூர்: வலுப்பூர் அம்மன் கோவிலுக்கு,30 டன் மரத்தில், 320க்கும் மேற்பட்ட சிற்பங்களுடன், புதிய தேர் செய்யும் பணி நடந்து வருகிறது.திருப்பூர் அடுத்துள்ளது, வலுப்பூர் அம்மன் கோவில். இங்கு, புதிதாக தேர் செய்யும் பணி நடந்து வருகிறது. தெய்வ காரியங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படும், 20க்கும் மேற்பட்ட இலுப்ப மரங்களில், 700 சதுர அடியில், 30 டன் மரத்தில் இத்தேர் உருவாக்கப்படுகிறது. சக்கரம், அச்சு என, ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாகவும், அழகிய சிற்ப வேலைப்பாடு களுடனும் உருவாக்கப்படுகிறது. முதலில் பூதப்பார் மண்டபம்; அடுத்து, சிறிய உருதளம், பெரிய உருதளம், நாராசனம், தேவாசனம் மற்றும் சுவாமி எழுந்தருளும் சிம்மா சனம் என, ஐந்து நிலைகளுடன், தேர் கும்பத்தையும் சேர்த்து, 29.25 அடி உயரத்தில், அமைக்கப்படுகிறது. தெய்வங்கள், மனிதர்கள், விலங்கு கள் என, 320க்கும் மேற்பட்ட பொம்மைகள் செய்து, சட்டத்தில் ஒவ்வொன்றாக இணைத்து, பெரிய தேராக உருவாக்கி வருகின்றனர். இப்பணியில் ஈடுபட்டுள்ள, பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரை சேர்ந்த ஸ்தபதி மதிவாணன் கூறும்போது, ""தற்போது, கோவில்களுக்கு தேர் செய்வது குறைந்து வருகிறது. தேருக்கு, இலுப்பை மரம் மட்டுமே பயன்படுத்தப்படும். இதை கரையான், பூச்சிகள் அரிக்காது; நாளாக நாளாக இறுகி, கல் போல் மாறிவிடும். ""தேர் சிற்ப சாஸ்திரங்கள் அடிப்படையில், ஒவ்வொரு படி நிலையும் உருவாக்கப்படுகிறது. இதற்காக, பெரம்பலூரில் இருந்து, 30 டன் மரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தேர் சிற்ப கலை, தற்போது அழிந்து வருகிறது. பழமையான தேர்களை புதுப்பிக்கவும், பழுதடைந்தவற்றுக்கு பதிலாக, புதிய தேர் செய்யவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.