பதிவு செய்த நாள்
20
ஜூலை
2015
11:07
ஆர்.கே.பேட்டை:ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமையை ஒட்டி, வங்கனுார் செவிண்டி அம்மனுக்கு, பக்தர்கள், நேற்று பால்குடங்களை சுமந்து வந்து பாலாபிஷேகம் செய்தனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனுார் செவிண்டியம்மன் கோவிலில், ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமையை ஒட்டி, நேற்று காலை பாலாபிஷேகம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, லட்சுமி நாராயண பெருமாள் கோவில் வளாகத்தில் இருந்து, பக்தர்கள் பால்குடங்களை சுமந்து, ஊர்வலமாக வந்து, பகல் 11:00 மணிக்கு, செவிண்டியம்மன் கோவிலை அடைந்தனர். பின், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கூழ் வார்த்தலும், பிரசாத வினியோகமும் நடந்தன. மாலை, 6:00 மணிக்கு, செவிண்டியம்மன் ஊஞ்சல் சேவையில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக, கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்தனர். மாலையில், எலுமிச்சை தீபம் மற்றும் மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர்.