வருண முனிவர் தன் மகனான பிருகுவிற்குப் போதிக்கின்ற பகுதி ஆதலால் இந்தப் பகுதி பிருகு வல்லி என்று பெயர் பெற்றது. வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொண்டால் நாம் வாழ முடியும். என்பதை முதற்பகுதியில் கண்டோம். இரண்டாம் பகுதி நம்மைப்பற்றி ஆராய்ந்தது. வாழ்க்கை, அதாவது உலகம், நாம் அதாவது மனிதன் ஆகிய இரண்டிற்கும் தலைவர் கடவுள், கடவுள்பற்றி ஏற்கனவே இரண்டாம் பகுதியில் (2:6-2:8) ஆரம்பித்த ஆராய்ச்சி இந்தப் பகுதியில் தொடர்கிறது. கடவுளில் நிலைபெற்ற பிறகும் உலகை மறுக்காதிருப்பது பற்றிய விளக்கத்துடன் உபநிஷதம் நிறைவுபெறுகிறது.
உணவுபற்றிய நான்கு முக்கியமான நியதிகளையும் இங்கே நாம் காண்கிறோம்.
ஆச்சாரியர், சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக! அறிவின் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக! நாம் இருவரும் ஈடுபாடுமிக்க ஆற்றலுடன் உழைப்போமாக! கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும்! எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக!
1. கடவுள் யார்? (1.1-6.1)
வருண முனிவரின் மகன் பிருகு, அவன் தன் தந்தையை அணுகி, கடவுள் என்பவர் யார்? என்று கேட்டான். அதற்கு வருணர் ஒருசில விளக்கங்களைக் கூறி தவம் செய்து உண்மையை அறியுமாறு கூறினார். தவம் செய்து படிப்படியாக உண்மையை உணர்ந்தான் பிருகு, இவ்வாறு படிப்படியாக உண்மையை அறிகின்ற முறையே தைத்திரீய உபநிஷதம் கூறும் இரண்டாவது வித்யையான பார்கவீ வாருணீ வித்யை.
1.1 வருண முனிவரின் மகன் பிருகு, அவன் தந்தையை அணுகி தெய்வத்திற்கு நிகரானவரே. கடவுள் என்பவர் யார் என்பதை எனக்கு உபதேசியுங்கள் என்று கேட்டான். அதற்கு அவர், உணவு, பிராணன், கண், காது, மனம், பேச்சு ஆகியவையே கடவுள் என்று கூறினார்.
இந்தப் பதிலிலிருந்து, பிருகுவால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. உணவு, பிராணன் போன்றவை எப்படி கடவுளாக முடியும்? என்று குழம்பி நின்றான். அவன், அவனது நிலைமையைக் கண்ட வருண முனிவர், அவன் புரிந்துகொள்வதற்காக, தாம் கூறியதைச் சற்று தெளிவுபடுத்தினார்.
1.2. வருண முனிவர் உபதேசத்தைத் தொடர்ந்தார்; யாரிடமிருந்து இந்த உயிரினங்கள் அனைத்தும் பிறக்கின்றனவோ, பிறந்தவை யாரால் வாழ் கின்றனவோ, மரணத்திற்குப் பிறகு யாரிடம் ஒடுங்கு கின்றனவோ அவரே கடவுள், அவரை அறிய முயற்சி செய். இந்த உபதேசத்தைக் கேட்டதும் பிருகு தவத்தில் ஈடுபட்டான். தவம் நிறைவுற்ற பிறகு.....
கடவுள் யார்?
அனைத்திற்கும் ஆதாரமானவர் அவர். அவரிலிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன. வாழ்கின்றன. ஒடுங்குகின்றன. இவ்வாறு கூறி உண்மையைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை பிருகுவிடம் விட்டுவிடுகிறார் வருணர்.
அதற்கான முயற்சியில் ஈடுபட்டான் பிருகு. எப்படி? தவத்தின்மூலம் பாரதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்று இங்கே கூறப்படுகிறது. சிவபெருமானைக் கணவனாக அடைய எண்ணிய பார்வதி தவம் செய்தாள்.அவரைப் பெற்றாள். மந்திரபூர்வமான ஆயுதங்களைப் பெற விரும்பிய அர்ஜுனன் தவத்தின்மூலமும் அவற்றைப் பெற்றான். எந்த உயரிய முயற்சிக்கும் தவம் அடிப்படையாகிறது. தவத்தின்மூலம் செய்யப்படுகின்ற முயற்சிகளே அரியனவற்றைச் சாதிக்கிறது. தவம் பற்றி கீதை விரிவாக ஆராய்கிறது.
தவம் என்பது என்ன? மனத்தையும் புலன்களையும் வசப்படுத்துவது (தபோ பாஹ்யாந்த: கரண ஸமாதானம்) என்று விளக்குகிறார் ஸ்ரீசங்கரர்.
எல்லா உண்மைகளும் நமக்குள்ளே உள்ளன. மனத்தையும் புலன்களையும் வசப்படுத்தி, நம்முள் ஆழ்ந்து பார்த்தால் நம்மைப்பற்றிய, பிரபஞ்சத்தைப்பற்றிய, இறைவனைப்பற்றிய அனைத்து உண்மைகளையும் அறிய முடியும். அதற்கான வழி தவம். எனவே பிருகு தவத்தில் ஈடுபட்டான்.
முதற்படி:
பிருகு படிப்படியாக உண்மையை அறிகிறான். இந்த மந்திரம் அவன் முதற்படியாகக் கண்ட உண்மையைக் கூறுகிறது.
2. உணவே கடவுள், ஏனெனில் உணவிலிருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன; தோன்றியவை உண வினாலேயே வாழ்கின்றன; மரணத்திற்குப் பிறகு உணவிலேயே ஒடுங்குகின்றன என்று அறிந்தான் பிருகு. பிறகு தந்தையாகிய வருண முனிவரை அணுகி, தெய்வத்திற்கு நிகரானவரே, கடவுள் என்பவர் யார் என்பதை எனக்கு உபதேசியுங்கள் என்று கேட்டான். அதற்கு அவர். தவமே கடவுள் தவத்தால் அவரை அடைவாயாக, என்று கூறினார். இந்த உபதேசத்தைக் கேட்டதும் பிருகு தவத்தில் ஈடுபட்டான். தவம் நிறைவுற்ற பிறகு.....
பிருகு தவத்தில் ஈடுபட்டபோது அவனுக்கு உண்மை தெரியவந்தது. உயிரினங்களுக்கு ஆதாரமாக உணவே உள்ளது. உணவிலிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன. வாழ்கின்றன. உணவுக்கு ஆதாரமான பூமியில் ஒடுங்குகின்றன. எனவே அதுதான் கடவுள் என்ற முடிவிற்கு அவன் வந்தான்.
தான் கண்ட உண்மையைத் தந்தையிடம் சென்று கூறினான் பிருகு, வருணர் அதனை ஆமோதிக்கவுமில்லை. மறுக்கவுமில்லை. மாறாக, தவத்தில் மேலும் ஆழ்ந்து ஈடுபடும்படி கூறினார். பிருகு கூறியதை ஆமோதித்தால், அதுவே முழு உண்மை என்று நினைத்து பிருகு தனது முயற்சிகளை நிறுத்திவிடுவான். உணவே கடவுள் என்பது உண்மையின் ஒரு பகுதி. எனவே உண்மையல்ல என்று அதை மறுக்கவும் இயலாது. அதனால் தொடர்ந்து முயற்சி செய்யுமாறு உபதேசித்தார் வருணர்.
முயற்சியின் ஆரம்பத்திலேயே விளைவைப்பற்றி கவலைப்படாமல் முயற்சியில் கவனம் செலுத்துவது மிக முக்கியம் என்பது இங்கே அறிவுறுத்தப்படுகிறது. வாழ்க்கையில் நம்மிடம் பெரிய குறை உள்ளது. குறிக்கோளே நம்மை மிகவும் கவர்வதாக உள்ளது... அதன் பரிமாணத்தின் காரணமாக, அதை அடைவதற்கான வழிமுறைகளை நாம் பெரிதாக எண்ணாமல் விட்டுவிடுகிறோம். தோல்வி வரும்போதெல்லாம், அதனை ஆராய்ந்து பார்த்தால் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது சதவீதம் செயல்களிலும் நாம் வழிமுறைகளில் கவனத்தைச் செலுத்தியிருக்க மாட்டோம். அதுதான் தோல்விக்குக் காரணமாக இருந்தது என்பது தெரியவரும். பாதையை முற்றுபெறச் செய்வதிலும் பலப்படுத்துவதிலும் ஒழுங்காகக் கவனம் செலுத்துவதே நாம் செய்ய வேண்டியது. பாதை சரியாக இருந்தால், பலன் வந்தேயாக வேண்டும்.... ஆதலால் வழிமுறையில் கவனத்துடன் இருப்பதே வாழ்வின் மேலான ரகசியம் என்று விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்.
எனவே வழிமுறையான தவத்தையே கடவுளாகக் கொண்டு முன்னேறுமாறு மகனுக்குக் கூறினார் வருணர். பிருகுவும் படிப்படியாக உண்மைகளைக் காணலானான்.
3. பிராணனே கடவுள், ஏனெனில் பிராணனி லிருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன; தோன்றி யவை பிராணனாலேயே வாழ்கின்றன; மரணத் திற்குப் பிறகு பிராணனிலேயே ஒடுங்குகின்றன. என்று அறிந்தான் பிருகு, பிறகு தந்தையாகிய வருண முனிவரை அணுகி, தெய்வத்திற்கு நிகரானவரே, கடவுள் என்பவர் யார் என்பதை எனக்கு உபதேசியுங்கள் என்று கேட்டான். அதற்கு அவர், தவமே கடவுள், தவத்தால் அவரை அடை வாயாக என்று கூறினார். இந்த உபதேசத்தைக் கேட்டதும் பிருகு தவத்தில் ஈடுபட்டான். தவம் நிறைவுற்ற பிறகு....
4. மனமே கடவுள், ஏனெனில் மனத்திலிருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன; தோன்றியவை மனத்தாலேயே வாழ்கின்றன; மரணத்திற்குப் பிறகு மனத்திலேயே ஒடுங்குகின்றன என்று அறிந்தான் பிருகு. பிறகு தந்தையாகிய வருண முனிவரை அணுகி, தெய்வத்திற்கு நிகரானவரே, கடவுள் என்பவர் யார் என்பதை எனக்கு உபதேசியுங்கள் என்று கேட்டான். அதற்கு அவர், தவமே கடவுள் தவத்தால் அவரை அடைவாயாக என்று கூறினார். இந்த உபதேசத்தைக் கேட்டதும் பிருகு தவத்தில் ஈடுபட்டான் தவம் நிறைவுற்ற பிறகு.....
5. புத்தியே கடவுள். ஏனெனில் புத்தியிலிருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன; தோன்றியவை புத்தியாலேயே வாழ்கின்றன; மரணத்திற்குப் பிறகு புத்தியிலேயே ஒடுங்குகின்றன என்று அறிந்தான் பிருகு. பிறகு தந்தையாகிய வருண முனிவரை அணுகி, தெய்வத்திற்கு நிகரானவரே, கடவுள் என்பவர் யார் என்பதை எனக்கு உபதேசியுங்கள் என்று கேட்டான். அதற்கு அவர், தவமே கடவுள். தவத்தால் அவரை அடைவாயாக என்று கூறினார். இந்த உபதேசத்தைக் கேட்டதும். பிருகு தவத்தில் ஈடுபட்டான். தவம் நிறைவுற்ற பிறகு...
6.1 ஆனந்தமே கடவுள், ஏனெனில் ஆனந்தத்திலிருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன; தோன்றியவை ஆனந்தத்தாலேயே வாழ்கின்றன; மரணத்திற்குப்பிறகு ஆனந்தத்திலேயே ஒடுங்குகின்றன என்று அறிந்தான் பிருகு.
2-6.1 வரையுள்ள 5 மந்திரங்களில் பிருகு படிப்படியாக உண்மையை உணர்வதைக் காண்கிறோம். 2:2, 1-2; 6.1 வரை
மனிதனின் ஐந்து உடம்புகள் பற்றி கண்டோம். இந்த ஐந்து உடம்புகளும் உணர்வின் ஐந்து நிலைகள். பிருகு தவத்தின் மூலம் இந்த உணர்வுநிலைகள் ஒவ்வொன்றாகக் கடந்து செல்கிறான். ஒவ்வொரு நிலையையும் அவன் அனுபவிக்கும்போது அதுவே எல்லாமாக அவனுக்குத் தோன்றுகிறது. ஆனால் வருண முனிவரின் சரியான வழிகாட்டுதலால் அவன் மேலும் மேலும் தவத்தில் ஈடுபட்டு முன்னேறுகிறான்.
வித்யையின் விளைவு:
படிப்படியாக உண்மையை அறிகிறான் பிருகு, பார்கவீ-வாருணீ வித்யையின் பலனை அல்லது நிறைவை இந்த மந்திரம் தெரிவிக்கிறது.
6.2. இது பார்கவீ - வாருணீ வித்யை. இது மேலான இதய வெளியில் நிலைபெற்றுள்ளது. யார் இவ்வாறு அறிகிறானோ அவன் இதய வெளியில் ஒளிரும் ஆன்மாவில் நிலைபெறுகிறான். அவன் உணவுச் செல்வம் உடையவன் ஆகிறான்; உண்டு மகிழ் கிறான். மக்கட்செல்வமும் கால்நடைச் செல்வமும் உடையவன் ஆகிறான். புனிதப் பேரொளி மிக்கவ னாக, மகிமை மிக்கவனாக ஆகிறான்.
கடவுள் யார் என்று பிருகு கேட்ட கேள்விக்கு, உணவு, பிராணன், கண், காது, மனம், பேச்சு, ஆகியவையே கடவுள் என்று பதில் கூறினார் வருணர், தவத்தின்மூலம் தாம் கண்ட உண்மைகளை பிருகு தெரிவித்தபோது, அவற்றை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளாமல் முயற்சியைத் தொடருமாறு கூறினார். ஐந்து படிகள் தாண்டிய பிறகு இதய வெளியில் ஒளிரும் உண்மையை உணர்கிறான் பிருகு. இங்கும் பயணம் நின்று விடவில்லை. ஆனால் இதயத்தில் ஆன்மாவை உணர்வது கடவுளை அறிவதற்கான முயற்சியில் ஒரு முக்கிய படி. பார்கவீ - வாருணீ வித்யை இந்த இடத்தில் நின்றுவிடுகிறது.
தன்னை உடம்பாக, பிறந்து இறக்கும் ஒருவனாக அறிந்திருந்த மனிதன் தன்னை மரணமற்ற ஓர் ஆன்மாவாக இங்கே உணர்கிறான். அவன் இறைவனை நாடி தன் பயணத்தைத் தொடரலாம்; அல்லது உலக வாழ்க்கையில் ஈடுபடலாம். இதைப் குறிப்பிடத்தான் இரண்டுவிதமான செல்வங்களும் கிடைப்பதாக இந்த மந்திரம் கூறுகிறது. இதயத்தில் ஆன்மாவை உணர்ந்த ஒருவனுக்கு உணவுச் செல்வம் போன்றவையும் கிடைக்கும்; புனிதப் பேரொளியும் கிடைக்கும். எதை வேண்டுமானாலும் அவன் ஏற்றுக் கொண்டு வாழ்க்கையைத் தொடரலாம். இதையே சுவாமி விவேகானந்தர், உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள். அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதை பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் (ண்ஞுடூஞூ ஞிணிணண்ஞிடிணிதண்) செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும். பெருமை வரும், நன்மை வரும், தூய்மை வரும், எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும். என்று எடுத்துக் காட்டுகிறார். சிறப்பான வாழ்க்கை வாழ இந்த ஆன்ம தரிசனம் ஒரு முக்கியப் படி.
2. வளமாக வாழுங்கள் (7-10.6)
தெய்வசிந்தையுடன் வாழ்க்கையை வளம் பெறச் செய்வதும், வளமாக வாழ்வதும் இறைவனின் மகிமையைப் போற்றுவதேயாகும். தெய்வசிந்தையுடன் செல்வத்தைப் பெருக்கி, வளமாக வாழ்வதுபற்றி தொடரும் மந்திரங்கள் கூறுகின்றன.
உணவைப் பழிக்கக் கூடாது:
உணவை தெய்வீகமாகப் போற்ற வேண்டும் என்று ஏற்கனவே (2:2,2) கண்டோம். அதற்கான நான்கு நியதிகள் இங்கே கூறப்படுகின்றன.
7. உணவைப் பழிக்கக் கூடாது. இது உங்கள் கடமை, பிராணனே உணவு. உணவை உண்பது உடம்பு. உடம்பு பிராணனில் நிலைபெற்றுள்ளது பிராணன் உடம்பில் நிலைபெற்றுள்ளது. எனவே உணவு உணவில் நிலைபெற்றுள்ளது. யார் இதனை அறிகிறானோ அவன் இந்த உண்மையில் நிலை பெறுகிறான். அவன் உணவுச் செல்வம் உடையவன் ஆகிறான். உண்டு மகிழ்கிறான். மக்கட் செல்வமும் கால்நடைச் செல்வமும் உடையவன் ஆகிறான். புனிதப் பேரொளி மிக்கவனாக, மகிமை மிக்கவனாக ஆகிறான்.
உணவை இறையருளின் ஒரு சின்னமாகக் காண வேண்டும். அந்த உணர்வுடனும் மரியாதையுடனும் அதைக் கையாள வேண்டும். இயற்கை நமக்குத் தருகின்ற உணவு எல்லா வளமும் சேர்ந்ததாக உள்ளது. அளவுக்குமீறி வேக வைப்பது, எண்ணெய் மசாலா போன்றவற்றை அளவுக்குமீறி சேர்ப்பது போன்ற காரணங்களால் உணவின் இயற்கைத் தன்மை கெடுகிறது. இவ்வாறு செய்யாமல் உணவை அதன் இயற்கை வளங்களுடனே உண்ண வேண்டும்.
உடம்பு உணவினால் வளர்கிறது. உடம்பை இயக்குவது பிராணன் எனவே உடம்பு பிராணனைச் சார்ந்துள்ளது. அது போல், பிராணனின் செயல்பாடும் உணவைப் பொறுத்தே அமைகிறது. தொடர்ந்து சாப்பிடாமல் இருந்தால் உடம்பின் இயக்கம் தடைபடுவதை நாம் உணரலாம். உடம்பும் பிராணனனும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. இரண்டும் உணவைச் சார்ந்திருக்கின்றன. எனவே வாழ்க்கைக்கு ஆதாரமான உணவைப் போற்ற வேண்டும்.
8. உணவை வெறுக்கக் கூடாது. இது உங்கள் கடமை. தண்ணீரே உணவு. உணவை உண்பது நெருப்பு, நெருப்பு தண்ணீரில் நிலைபெற்றுள்ளது. தண்ணீர் நெருப்பில் நிலைபெற்றுள்ளது. எனவே உணவு உணவில் நிலைபெற்றுள்ளது. யார் இதனை அறிகிறானோ அவன் இந்த உண்மையில் நிலை பெறுகிறான். அவன் உணவுச் செல்வம் உடையவன் ஆகிறான். உண்டு மகிழ்கிறான். மக்கட் செல்வமும் கால்நடைச் செல்வமும் உடையவன் ஆகிறான் புனிதப் பேரொளி மிக்கவனாக, மகிமை மிக்கவனாக ஆகிறான்.
உடம்பை வளர்க்கவே உணவு. எனவே அதற்குத் தேவையான உணவை தேவையான அளவில் உண்ண வேண்டும். மாறாக, சுவையைக் கருத்தில் கொண்டு சில உணவை விரும்புவதும் சில உணவை வெறுப்பதும் கூடாது.
2:1,2 - இல் படைப்புபற்றி கண்டோம். படைப்பின் வரிசைக் கிரமத்தில் நெருப்பிலிருந்து நீர் வருகிறது. எனவே நெருப்பில் நீரின் அம்சமும், நீரில் நெருப்பின் அம்சமும் இருக்கும். இதையே நீரும் நெருப்பும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதாக மந்திரம் கூறுகிறது.
அன்னம் - உணவை; பஹுகுர்வீத - ஏராளமாக உற்பத்தி செய்ய வேண்டும்; ப்ருதிவீ - பூமி; ஆகாச - வெளி; (1. பலமுறை வருகின்ற சொற்களுக்கு ஒருமுறை மட்டுமே பொருள் தரப்பட்டுள்ளது.)
9. உணவை ஏராளமாக உற்பத்தி செய்யுங்கள் இது உங்கள் கடமை, பூமியே உணவு. உணவை உண்பது வெளி வெளி பூமியில் நிலைபெற்றுள்ளது. பூமி வெளியில் நிலைபெற்றுள்ளது. எனவே உணவு உணவில் நிலைபெற்றுள்ளது. யார் இதனை அறி கிறானோ அவன் இந்த உண்மையில் நிலைபெறுகிறான் அவன் உணவுச் செல்வம் உடையவன் ஆகிறான்; உண்டு மகிழ்கிறான். மக்கட் செல்வமும் கால்நடைச் செல்வமும் உடையவன் ஆகிறான். புனிதப் பேரொளி மிக்கவனாக, மகிமை மிக்கவனாக ஆகிறான்.
பூமியிலிருந்தே உணவு பெறப்படுகிறது. எனவேதான் உணவே பூமி எனப்பட்டது. பூமியை வெளி சூழ்ந்து நிற்பதால் பூமி வெளியின் உணவாகக் கூறப்பட்டது.
பூமி வெளியைத் தாங்குவது போல் உள்ளது. வெளியில் தான் பூமி உள்ளது. எனவே இரண்டும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன.
உணவு தேடி வருகின்ற யாரையும் திருப்பி அனுப்பக் கூடாது:
10.1. உணவு தேடி வருகின்ற யாரையும் திருப்பி அனுப்பக் கூடாது. இது உங்கள் கடமை. எனவே பல வழிகளில் ஏராளமாக உணவை உற்பத்தி செய்ய வேண்டும். யார் எப்போது வந்தாலும். இவனுக்கு உணவு தாயாராக உள்ளது என்று சொல்லுமளவிற்கு உணவு தாராளமாக இருக்க வேண்டும். உணவைச் சிறந்தமுறையில் தயாரிப்பவனுக்கு உணவு சிறந்த முறையில் கிடைக்கிறது. சாதாரணமாகத் தயாரிப்பவனுக்குச் சாதாரண முறையில் கிடைக்கிறது. மிகச் சாதாரணமாகத் தயாரிப்பவனுக்கு மிகச் சாதாரணமாகக் கிடைக்கிறது. உணவின் முக்கியத்துவத்தையும், உணவு தானத்தால் வரும் பலனையும் அறிந்து அதைச் செய்பவன் அந்தப் பலனைப் பெறுகிறான்.
நல்லது செய்பவனுக்கு நல்லது கிடைக்கும். என்ற உண்மையை அடிப்படையாக வைத்து இங்கே உணவின் முக்கியத்துவம் கூறப்படுகிறது. நல்ல உணவைத் தயாரித்து என்றால், தயாரிப்பது மட்டுமல்ல; வேண்டியவர்களுக்கு தானம் செய்யவும் வேண்டும். அவ்வாறு மிகச் சிறந்த உணவை தானம் செய்பவர்கள். மக்கட்செல்வம் கால்நடைச் செல்வம், புனிதப் பேரொளி போன்றவற்றை மிகச் சிறந்த முறையில் பெறுவான்.
இந்த நான்கு மந்திரங்களில் (7-10,1) உணவு என்று கூறப்பட்டதை செல்வம் என்ற பரந்த பொருளில் காண வேண்டும். உணவை ஏராளம் உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் செல்வத்தைப் பெருக்க வேண்டும். உபநிஷதங்களின் மிகவும் ஆக்கபூர்வமான ஒரு கருத்து இது.
தெய்வசிந்தையுடன் வாழ்தல் (10.2-10.3):
தெய்வசிந்தையுடன் செல்வத்தைப் பெருக்க வேண்டும். வாழ வேண்டும் என்று கூறினோம். அதனை அடுத்த இரண்டு மந்திரங்கள் விளக்குகின்றன. தெய்வ சிந்தையுடன் வளமாக வாழ்வது என்பதை இந்த இரண்டு மந்திரங்களும் இரண்டு கோணங்களில் கூறுகின்றன.
10.2. தெய்வசிந்தையுடன் வாழ்வதுபற்றி கூறப் படுகிறது. வாக்கில் நன்மையாகவும், பிராணன் மற்றும் அபானனில் மங்கலமாகவும், கைகளில் செயலாகவும், கால்களில் நடையாகவும், குதத்தில் வெளியேற்றுதலாகவும் இறைவன் செயல்படுகிறார்.
தனிநபர் வாழ்க்கையில் தெய்வசிந்தனை பற்றி இந்த மந்திரம் கூறுகிறது. வாக்காக, பிராணனாக, செயல்களாக இறைவனே செயல்படுகிறார். நன்மை தரும் வாக்குகள் நம்மிடமிருந்து வெளிவரும்போது, மங்கலமான செயல்களில் நாம் ஈடுபடும்போது அங்கே இறைவன் வெளிப்படுகிறார். அதாவது வாழ்க்கையில் தெய்வசிந்தனை அதிகரிக்க வேண்டுமானால் நன்மை தருகின்ற, மங்கலமான செயல்களில் ஈடுபட வேண்டும். எந்தச் செயல்களும் வெறுக்கத்தக்கதல்ல என்பதை உணர்த்தவே வெளியேற்றுதல் பற்றியும் குறிப்பிடப்படுகிறது.
10.3. தெய்வசிந்தனையின் அடுத்த பகுதி இது. மழையில் திருப்தியாகவும், மின்னலில் ஆற்றலாக வும், மிருகங்களில் புகழாகவும் நட்சத்திரங்களில் ஒளியாகவும், குழந்தையை உற்பத்தி செய்யும் மேலான இன்பமாகப் பிறப்புறுப்பிலும், வெளியில் எல்லாமாகவும் இறைவனே உள்ளார்.
தனிநபர் வாழ்க்கையில் தெய்வ சிந்தனை நிறைய வேண்டுமானால் சமுதாயமும் இயற்கையும்கூட கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் மனிதன் ஒஓ தீவல்ல; அவன் சமுதாயத்தில் ஓர் அங்கம் இந்த மந்திரத்தில் சமுதாயம் மற்றும் இயற்கையின் பல்வேறு அம்சங்கள் எடுத்துக்கொள்ளப் படுகின்றன. இங்கே கூறப்பட்டுள்ள ஒவ்வொன்றும் தன்னளவில் நல்லவையும் அல்ல, தீயவையும் அல்ல. நாம் பயன்படுத்துகின்ற விதமே அவற்றின் தன்மையை நிர்ணயிக்கிறது. இந்த உலகம் நல்லதும் இல்லை. கெட்டதும் இல்லை... நெருப்பு தன்னளவில் நல்லதோ தீயதோ இல்லை. அது நமக்கு இதமான வெது வெதுப்பு தரும்போது, ஆ, எவ்வளவு அருமையான நெருப்பு என்கிறோம். விரலைச் சுட்டுவிட்டால் அதையே குறை கூறுகிறோம். எனினும், நெருப்பு தன்னளவில் நல்லதோ கெட்டதோ இல்லை. அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோமோ அதற்கு ஏற்ற உணர்ச்சியை அது நம்முள் எழுப்புகிறது. உலகமும் அவ்வாறே என்று சுவாமி விவேகானந்தர் கூறுவது இங்கே நினைவுகூரத் தக்கது.
மழை, பெருமழையாகப் பொழிந்து தீங்கு விளைவிப்பதும், அதனால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பதும் மழை. ( கொடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. - திருக்குறள், 15.) என்கிறார் திருவள்ளுவர்.
அதுபோலவே மின்னல், மிருகங்கள், நட்சத்திரங்கள், பிறப்புறுப்பு போன்ற அனைத்தும் நன்மை, தீமை இரண்டையும் விளைவிக்க வல்லவை. அவற்றின் நல்ல பகுதியை எடுத்துக்கொள்ள பழக வேண்டும். அதாவது, சமுதாயம் மற்றும் இயற்கையின் நல்ல பகுதியை மட்டும் ஏற்றுக்கொண்டு வளர முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு தன்னளவில் இறைவனின் மகிமை வெளிப்படும்விதமாக வாழ்ந்து, சமுதாயத்திலிருந்து நல்லவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு வளர்வதே தெய்வசிந்தனையுடன் வாழும் வாழ்க்கையாகும்.
ஆக்கபூர்வமான வாழ்க்கையின் பலன்: 10.4-10.6:
இத்தகைய தெய்வசிந்தனைமிக்க, ஆக்கபூர்வமான வாழ்க்கையின் பலன் என்ன என்பதை இந்த மூன்று மந்திரங்கள் தெரிவிக்கின்றன.
10.5. இந்த மனிதனில் இருப்பவரும் அந்தச் சூரிய னில் இருப்பவரும் ஒருவரே. இந்த உண்மையை அறிபவன் உலக உணர்விலிருந்து விடுபடும்போது அன்னமயம், பிராண மயம், மனோ மயம், விஜ்ஞான மயம், ஆனந்த மயம் ஆகிய உடம்புகளைக் கடந்து செல்கிறான். பிறகு விரும்பிய வடிவைப் பெற்று; விரும்பிய உலகங்களில், விரும்பிய உணவை உண்டபடி சுற்றித் திரிகிறான்; பாடல்களைப் பாடியபடி ஆனந்தமாக இருக்கிறான்.
10.6 ஆகா! ஆகா! ஆகா! நானே உணவு, நானே உணவு, நானே உணவு! நானே உணவை உண்பவன், நானே உணவை உண்பவன், நானே உணவை உண்பவன்! நானே இந்தச் சுலோகங்களை ஏற்படுத்தியவன், நானே இந்தச் சுலோகங்களை ஏற்படுத்தியவன். நானே இந்தச் சுலோகங்களை ஏற் படுத்தியவன் படைப்பில் முதலில் தோன்றியவன் நானே! தேவர்களுக்கும் முன்னால் அழிவற்றவனாக நானே இருக்கிறேன்! எனக்கு உணவு தருபவனை நான் காக்கிறேன். எனக்குத் தராமல் உண்பவனை நானே உண்கிறேன். உலகங்கள் அனைத்தையும் நான் வெற்றி கொள்கிறேன். பொன்னொளி வீசிப் பொலிகின்ற தேவன் நானே! இவ்வாறு அறிபவன் அனைத்து பலன்களையும் அடைகிறான். இவ்வாறு இந்த உபநிஷதம் நிறைவு பெறுகிறது.
தெய்வ சிந்தையுடன் ஆக்கபூர்வமான வாழ்க்கையை உணர்ந்து, அனுபவித்து வாழ்பவன் ஆனந்தத்தை அனுபவிக்கிறான். அத்தகைய ஒருவரின் ஆனந்த அனுபவத்தைக் கூறி இந்த உபநிஷதம் நிறைவு பெறுகிறது.
ஆச்சாரியர், சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக! அறிவின் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக! நாம் இருவரும் ஈடுபாடுமிக்க ஆற்றலுடன் உழைப்போமாக! கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும்! எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப் போமாக.