திருப்புவனம்: சுமைதாங்கி கல் கிராமப்புறங்களில் அதிகளவு காணப்படும். இந்த கல்லிற்கு பின் சோகமயமான வரலாறும் இருக்கும்.போக்குவரத்து வசதியில்லாத அந்த காலத்தில் பொருட்கள் அனைத்தையும் தலைச்சுமையாகவோ அல்லது மாட்டுவண்டி மூலமாகவோ ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது வழக்கம். நீண்ட தூரத்திற்கு தனியாளாய் சுமைகளை கொண்டு செல்பவர்கள் சற்று இளைப்பாற வசதியாக சாலையோரம் சுமைதாங்கி கல் கட்டப்படும். இரண்டு தட்டை வடிவ கற்கள் மீது பலகை போன்ற அமைப்புடன் மூன்றாவதாக ஒரு கல் வைக்கப்பட்டிருக்கும். தலைச்சுமையை அந்த கல்லின் மீது இறக்கி வைத்து சற்று இளைப்பாறி மீண்டும் சுமையை தூக்கி கொண்டு செல்வது கிராம மக்களின் வழக்கம். இந்த கல் கர்ப்பிணி பெண்கள் பிரசவம் உள்ளிட்ட காரணங்களால் இறப்பு நேரிடும் போது அவர்களின் நினைவாக உறவினர்களால் வைப்பது சுமைதாங்கி கல். வயிற்றில் உள்ள சுமையை இறக்காமல் உயிரிழப்பவர்களின் நினைவாக வைக்கப்படும் கல்லில் சுமைகளை இறக்கி வைப்பதன் மூலம் அவர்களின் ஆன்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை. நாளடைவில் கர்ப்பிணி பெண் இறப்பு குறைந்து விட்டாலும் ஒரு சில சம்பவங்களில் உயிரிழக்கின்றனர். அவர்களின் நினைவாக இன்றும் சுமைதாங்கி கல் வைக்கப்படுகிறது. திருப்புவனம் பஸ் டெப்போ அருகே சமீபத்தில் இப்படி ஒரு சுமைதாங்கி கல் வைக்கப்பட்டுள்ளது.