இன்று ஆடிப் பவுர்ணமியில் எல்லா திருமால் திருத்தலங்களிலும் கஜேந்திர மோட்சம் நடைபெறும். இருந்தபோதிலும் குறிப்பிட்ட தலங்களான திருமோகூர், திரு அட்டபுயகரம் (கருடாரூடரான திவ்யமங்கள விக்ரஹம் உள்ளது.) கபிஸ்தலம் இங்கெல்லாம் மேலும் சிறப்பாக நடைபெறும். சோளிங்கர் குளக்கரையில் கருடாரூட கஜேந்திரவரதரைக் காணலாம். ஸ்ரீரங்கம் அற்றங்கரையில் கோவில் யானையை தண்ணீரில் கால்படும்படி நிற்கவைப்பர். அப்போது வெள்ளி முதலையின் வாயைப்பிளந்து யானையின் காலைப் பற்றவைப்பதுபோல பாவனை செய்வர். கரையில் கருடாரூடரான திருமால் காட்சிகொடுத்து மோட்சம் தரும் நிகழ்ச்சி நடக்கும். வைகுண்டத்தில் திருமாலுக்கு இடையறாது தொண்டு செய்பவர்களுக்கு நித்ய சூரிகள் என்று பெயர் இவர்களில் ஒருவர் பட்சிராஜாவான கருடன். கஜேந்திர மோட்ச வைபவத்தில் திருமால் கருடனை அழைக்காமல் அவசரமாக கஜேந்திரனைக் காப்பாற்ற சென்ற போது, அவர் அவரசத்திற்கேற்ப உடன்வந்து திருமாலைச் சுமந்துசென்றார். கருடன் அன்று கோயிலில் கருட சேவை விழாவும் கண்டிப்பாக நடைபெறும்.
குருபூர்ணிமா என்ற வியாச பவுர்ணமி: மகாபாரதத்தை எழுதிய வியாசர் மஹாவிஷ்ணுவின் பூரண அருள் பெற்றவர். ஆசார்ய பரம்பரை ஸ்ரீமன் நாராயணரை முதலாமானவராகக் கொண்டது. நாராயணனிடமிருந்து பிரம்மா, அடுத்து வசிஷ்டர், அவர்மாணவர் சக்தி, அடுத்தவர் பராசரர், அவர் மாணவர் வியாசர், இவர் மகன் சுகர் என்று தொடர்கிறது. ஆடிமாதப் பவுர்ணமியை ஆஷாட பவுர்ணமி என்பர். அன்று துறவிகள் வியாச பூஜை செய்வார்கள். அடுத்து வேதங்களை ஆய்வுசெய்து விவாதிப்பார்கள். வியாசர் காசிக்குச் சென்ற போது அவர் பசியால் வாடுவதைக் கண்ட அன்னபூரணி, அவர் இருப்பிடம் வந்து தானே அன்னமிட்டாள். அந்த இடத்திற்கு வியாச காசி என்றும், அங்கு ஓடும் கங்கைக்கு வியாச கங்கை என்றும் பெயர் வியாச காசியை ராம் நகர் என்பர் காசியையும் வியாச காசியையும் இணைக்க பாலம் ஒன்றும் உள்ளது. ஆஷாட பவுர்ணமியான ஆடிப் பவுர்ணமியன்று முறையான வழிபாடுகள் மூலம் நாம் குரு வணக்கத்தை வியாசருக்கு சமர்ப்பிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் சுப்ரமண்யர் கோயிலில் கொடிமரம் அருகேயுள்ள மயில், ரிஷபம், மூஞ்சுறு வாகன பீடத்திற்கு எதிரே பிரம்மாண்ட வியாசர் சிலை உள்ளது. இன்று குருபூர்ணிமாவை முன்னிட்டு அலகாபாத் கங்கை யமுனை நதி பகுதியில் ஏராளமான பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர்.