பதிவு செய்த நாள்
06
ஆக
2015
11:08
கூவத்துார்:கூவத்துார், திருவாலீஸ்வரர் கோவில் குளத்தை, 60 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.கூவத்துார், கிழக்கு கடற்கரை சாலை அருகில் உள்ள, திரிபுரசுந்தரி உடனுறை திருவாலீஸ்வரர் கோவில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்து சமய அறநிலையத்துறை, மாமல்லபுரம், ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளையின்கீழ், நிர்வகிக்கப்படுகிறது. கோவில், நீண்டகாலமாக பராமரிப்பின்றி சீரழிந்தது. இந்த நிலையில் கடந்த, 2012ம் ஆண்டு திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு, திருப்பணிகள் துவக்கப்பட்டன. ஆணையர் பொதுநிதி, 14.20 லட்சம் ரூபாய்; திருப்பணிக்குழு தலைவர் நன்கொடை என, 1.5 கோடி ரூபாய் செலவில், இப்பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.இது ஒருபுறமிருக்க, கோவிலை ஒட்டியுள்ள திருக்குளமும், புதுப்பிக்கப்பட்டு வருகிறது. குளம், 340 அடி நீளம்; 320 அடி அகலம்; 8 அடி ஆழம் கொண்டது. தமிழக சுற்றுச்சூழல் துறையின் 25 லட்சம் ரூபாய் மதிப்பில், உட்புற குளம்; பக்கவாட்டு கான்கிரீட் தளம்; படித்துறை என, மேம்படுத்தப்பட்டு, கொடிகள் படர்வதை தவிர்க்க, சுத்திகரிப்பு கருவியும் அமைக்கப்படுகிறது.குளத்தைச் சுற்றிலும், 400 அடி நீளம்; 400 அடி அகலம் கொண்ட சுற்றுச்சுவர், திருப்பணிக்குழு தலைவரின் நன்கொடையாக, 35 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.