பதிவு செய்த நாள்
10
ஆக
2015
12:08
ஊத்துக்கோட்டை:ஆடி மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, அம்மன் கோவில்களில் கூழ்வார்த்து, பொங்கலிட்டு வழிபட்டனர். ஊத்துக்கோட்டை ரோஜா தெருவில் உள்ளது புற்றுக் கோவிலில் ஆடி மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி நேற்று, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.இதையொட்டி, ரெட்டி தெருவில் உள்ள எல்லையம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின், திரளான பெண்கள் தலையில் கூழை சுமந்து, ஊர்வலமாக சென்று புற்றுக் கோவிலை அடைந்தனர். அங்கு பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.இதேபோல், நாகலாபுரம் சாலையில் உள்ள புற்றுக் கோவில், லட்சிவாக்கம் செங்காளம்மன் கோவில், பெரியபாளையம் பவானியம்மன் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான அம்மன் கோவில்களில், பக்தர்கள் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபட்டனர்.