பதிவு செய்த நாள்
14
ஆக
2015
11:08
நந்திவரம், நந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற, இந்து சமய அறநிலைய துறை முடிவு செய்துள்ளது. கூடுவாஞ்சேரி அடுத்த, நந்திவரத்தில், 1,300 ஆண்டுகள் பழமையான, நந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு சொந்தமாக, நந்தீஸ்வரர் காலனி, ஜெய்பீம் நகர் உட்பட பல்வேறு பகுதிகளில், 52 ஏக்கர் நிலம் உள்ளது.
இதில், நந்தீஸ்வரர் காலனி மற்றும் ஜெய்பீம் நகரில், வணிக வளாகங்கள், தனியார் திரையரங்கம் மற்றும் 300க்கும் மேற்பட்டவர்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இதில், வணிக வளாகம், திரையரங்கம் ஆகியவற்றுக்கு, 99 ஆண்டுகளுக்கு நிலம் குத்தகைக்கு விடப்பட்டு உள்ளது.வாடகை பாக்கிஇங்கு, தரை வாடகையாக, மாதந்தோறும் 10 ரூபாயை, 40 ஆண்டுகளுக்கு முன், கோவில் நிர்வாகம் வசூலித்து வந்தது. தற்போது, நிலத்திற்கு அரசு நிர்ணயித்துள்ள மதிப்பீட்டு தொகையில், ஒரு பகுதியை, தரை வாடகையாக செலுத்த வேண்டும் என, குத்தகை எடுத்தவர்களுக்கு கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வாடகை அதிகம் என, கருதிய குத்தகைதாரர்கள், பணம் செலுத்தாமல் உள்ளனர். இதனால், நிர்வாகத்திற்கு, பல லட்சம் ரூபாய், வாடகை பாக்கி வரவேண்டி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கோவில் நிலத்தின் ஏழு ஏக்கரை, சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளதோடு, விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நிலம் மீட்க...: அரசியல் பிரமுகர்களும், ரவுடிகளும் கூட்டு சேர்ந்து, இந்த கோவில் நில விற்பனையில்ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கோவில் நிலத்தை மீட்கவும், வாடகை பணத்தை முறையாக வசூலிக்கவும், இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, இந்து சமய அறநிலைய துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தை மீட்கவும், வாடகை பணத்தை முறையாக வசூலிக்கவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். - நமது நிருபர் -