பதிவு செய்த நாள்
17
ஆக
2015
01:08
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த, கட்டிகானப்பள்ளி மேல்புதூர் பெரியமாரியம்மன் கோவில் ஆடிப்பூரத் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி அடுத்த, கட்டிகானப்பள்ளி மேல்புதூரில் உள்ள பெரியமாரியம்மன் கோவிலில், ஆடிப்பூரத் திருவிழா, கடந்த, 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், பூ மிதித்தல் ஆகிய ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், மேல்பட்டி, கீழ்புதூர், மேல்புதூர், பெருமாள்நகர், மோட்டூர் லைன்கொல்லை, மேல்சோமார்பேட்டை, கீழ்சோமார்பேட்டை, நாயுடு தெரு, ஆனந்த் நகர், எம்ஜிஆர் நகர், புதிய வீட்டு வசதி வாரியம் மற்றும் ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்த, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். மாவிளக்கு ஊர்வலத்தின் போது, அந்தந்த பகுதியை சேர்ந்தவர் பூ கரகம் எடுத்துகொண்டு, ஸ்வாமியை ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர், கோவில் அருகில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, பக்தர்கள் கவுண்டமணி, தங்கவேல், ராமன், விஜி, ராமச்சந்திரன், சேகர் ஆகியோர் கிரேன் மற்றும் டாடா ஏஸ் வாகனங்களில், தங்களது முதுகில் அலகு குத்திக் கொண்டு, அந்தரத்தில் தொங்கி வந்து, தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவினையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.