சபரிமலையில் நடை அடைப்பு: 26ம் தேதி மீண்டும் திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2015 10:08
சபரிமலை: ஆவணி மாத பூஜைகள் முடிந்து 21ம் தேதி இரவு சபரிமலை நடை அடைக்கப்படுகிறது. திருவோண பூஜைகளுக்காக வரும் 26-ம் தேதி மாலை திறக்கப்படும். ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்டது. 17-ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடை திறந்தார். தொடர்ந்து அபிஷேகம் நடந்தது. நிர்மால்ய தரிசனத்துக்கு பின் நெய்யபிஷேகம் தொடங்கியது. எல்லா நாட்களிலும் படிபூஜை, சகஸ்ரகலச பூஜை, உதயாஸ்தமன பூஜை, களபபூஜை, புஷ்பாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. நாளை இரவு ஏழு மணிக்கு படிபூஜை, இரவுஒன்பது மணிக்கு அத்தாழபூஜைக்கு பின்னர் பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின் திருவோண பூஜைகளுக்காக 26-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கிறது. 30-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். 28-ம் தேதி ஐயப்பன் சிலைக்கு ஓண உடை அணிவிக்கப்பட்டு பூஜை நடைபெறும். அன்று மதியம் திருவோண விருந்து நடைபெறும். 30-ம் தேதி இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.