யுனெஸ்கோ பட்டியலில் பத்மனாபபுரம் அரண்மனை: பாரம்பரிய நினைவு சின்னம் ஆகிறது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2015 12:08
நாகர்கோவில்:திருவிதாங்கூர் மன்னரின் தலைமையிடமாக திகழ்ந்த பத்மனாபபுரம் அரண்மனை, யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களின் மாதிரி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இறுதி பட்டியல் வரும் பிப்.,16-ம் தேதி வெளியாகிறது. இதுகுறித்து கேரள தொல்பொருள் ஆராய்ச்சித்துறை இயக்குனர் டாக்டர் பிரேம்குமார் கூறியதாவது: யுனெஸ்கோவின் பாராம்பரிய நினைவு சின்ன பட்டியலில் சேர்க்க இந்தியாவில் இருந்து 41 பழங்கால பாரம்பரிய நினைவு சின்னங்களில் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டது. இதில் கேரள மாநிலம் வயநாடு எடக்கல் குகையும், கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் குமரி மாவட்டம் பத்மனாபபுரம் அரண்மனையும் சேர்க்கப்பட்டிருந்தது. தற்போது யுனெஸ்கோ வெளியிட்ட மாதிரி பட்டியலில் பத்மனாபபுரம் அரண்மனை இடம் பெற்றுள்ளது. இறுதி பட்டியலில் பத்மனாபபுரம் அரண்மனையை இடம் பெற செய்ய யுனெஸ்கோ அளித்துள்ள பரிந்துரையின் படி அரண்மனையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரண்மனையில் சில பகுதிகள் அடைக்கப்பட்டிருந்தது. அங்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொது மக்கள் பார்வையிட வசதி செய்து கொடுக்கப்படும்.
இதன் அடிப்படையில் ராணி தங்கியிருந்த வேப்பமூடு மாளிகை திறக்கப்பட்டுள்ளது. அரண்மனையில் எந்த பகுதியும் இனி மூடப்பட்டிருக்காது. அரண்மனை வளாகத்தில் தொல்பொருள் குழந்தைகள் பூங்கா அமைக்கப்படும். முழுக்க முழுக்க மரத்தில் செய்யப்பட்ட பத்மனாபபுரம் அரண்மனை யுெனஸ்கோவின் இறுதி பட்டியலில் இடம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக-கேரள மக்களை கலாசார ரீதியாக இணைக்கும் நவராத்திரி பவனி வரும் அக்., 11ம் தேதி பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து புறப்படுகிறது. இதில் கேரள கவர்னர் சதாசிவம் கலந்து கொள்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.