தேவிபட்டினம் நவபாஷாணத்தில் வழக்கறிஞர் கமிஷனர் ஆய்வு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2015 11:08
ராமநாதபுரம்: தேவிபட்டினம் நவபாஷாண கோயிலில் தற்போதைய நிலை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி வழக்கறிஞர் கமிஷனர் சங்கர் ஆய்வு மேற்கொண்டார். தேவிபட்டினம் நவபாஷாண கோயிலில் சுகாதார சீர்கேடுகளை சரி செய்யவும், பரிகார பூஜைகளுக்காக பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்கவும் உத்தரவு விடுமாறு தேவிபட்டிணத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் சுதாகரன், வேலுமணி அமர்வு விசாரணை செய்தது. நவபாஷாண கோயிலில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கான காரணங்கள், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்ட தற்போதை நிலை குறித்து ஆய்வு செய்து செப்., 1 ல் அறிக்கை சமர்ப்பிக்குமாறு வழக்கறிஞர் கமிஷனருக்கு உத்தரவிட்டது. அதன்படி வழக்கறிஞர் கமிஷனர் சங்கர் நேற்று நவபாஷாண கடற்கரை எதிரே உள்ள சங்கல்ப மண்டபம், நவ கிரகங்கள் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டது. நவபாஷாணத்தில் செய்யவேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து பக்தர்களிடமும் கேட்டறிந்தார், உடன் ராமநாதபுரம் தேவஸ்தான வக்கீல் ரமேஷ், மனுதாரர் வக்கீல் மெல்டியூ, இந்து சமயஅறநிலைத்துறை உதவி கமிஷனர் ரோஷாலிசுமைதா, தக்கார் செல்வி, திவான் மகேந்திரன் உட்பட பலர் இருந்தனர்.