மானாமதுரை: விநாயகர் சதுர்த்திக்காக மானாமதுரையில் சிலை தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும். மூன்றாம் நாள் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும். இதற்காக மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்கள் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரை அடி முதல் ஏழு அடி உயரம் வரை சிலைகளை செய்கின்றனர். சிறிய சிலைகள் அச்சில் வார்க்கப்பட்டு நிழலில் காயவைக்கப்படுகிறது.
பின்னர் வர்ணங்கள் பூசப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. 3 அடி முதல் 7 அடி வரை உள்ள சிலைகள் கையினால் நுட்பமான வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்படுகின்றன. அச்சுகளில் கல்யாண விநாயகர், தம்புரா விநாயகர், லட்சுமி விநாயகர்,வெற்றிலை விநாயகர் என பல ரகங்கள் கடந்தாண்டு தயாரிக்கப்பட்டன. இந்தாண்டு சிம்ம வாகனத்தில் விநாயகர் அமர்ந்துள்ளது போன்ற புதிய ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு அடி உயரம் கொண்ட இந்த சிலையில் பல்வேறு வர்ணங்கள் பூசப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தயாரிப்பாளர் செந்தில் கூறுகையில்: மானம்பாக்கி,சுந்தரநடப்பு உள்ளிட்ட இடங்களில் இருந்து டிரை சைக்கிளில் மணல் அள்ளி வந்து விநாயகர் சிலை தயாரிக்கிறோம்.நாள் ஒன்றுக்கு 40 முதல் 60 சிலைகள் வரை தயாரிக்கிறோம். திருச்சி,சிவகங்கை,ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் சிலைகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். இந்த வருடம் சிம்ம வாகனத்தில் விநாயகர் என்ற புதிய டிசைன் அறிமுகப்படுத்தியுள்ளோம். சிலைகள் 10 ரூபாயில் இருந்து உயரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்துள்ளோம், என்றார்.