பதிவு செய்த நாள்
25
ஆக
2015
12:08
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உள்ள பிரசித்தி பெற்ற, சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா தேரோட்டம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழமையான கோவில்களுள் ஒன்றான, திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில், கடந்த, 16ம் தேதி, ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, அங்கு அமைக்கப்பட்டிருந்த யாக
சாலையில், தினமும், காலை, 11 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. மாலை, 7 மணிக்கு சத்தியமூர்த்தி பெருமாள், ஆண்டாள் வீதிஉலா நடந்தது.
திருவிழாவில், ஒவ்வொரு நாளும் ஸ்வாமிக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார தீபாராதனை நடந்தது. அதன் பின், ஆண்டாள் திருவீதி உலாவும், ஆண்டாள் திருக்கல்யாணமும் நடந்தது. நேற்று, சத்திய மூர்த்தி பெருமாள், ஆண்டாள் ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தேர் வடம்பிடித்து இழுத்தனர்.
இதையடுத்து, சத்திய மூர்த்தி பெருமாள், புஷ்ப ஊரணியில் தீர்த்தவாரி கண்டருளினார். பக்தர்களுக்கு பூ, குங்குமம் வளையல் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இன்று, ஸ்வாமி திருவீதி உலா முடிந்து, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, புதுக்கோட்டை திருக்கோவில்களின் செயல் அலுவலர் கருணாகரன், ஆலய மேற்பார்வையாளர் ராஜேந்திரன், உதவி ஆணையர் ஜெயபிரியா ஆகியோர் செய்தனர்.