பதிவு செய்த நாள்
25
ஆக
2015
12:08
திருச்சி: திருச்சி சர்க்கார் பாளையம் காசி விஸ்வநாதர் கோவிலில், நேற்று நடந்த சூரியவழிபாடு நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். திருச்சி கல்லணை சாலை, காவிரி தென்கரை சர்க்கார்பாளையத்தில் கரிகால்சோழனால் கட்டப்பட்டு பிரதிஷ்டை
செய்யப்பட்ட, பழமையான காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் உள்ள மூலவர் காசி விஸ்வநாதர் சிவலிங்கத்தின் மீது ஆண்டு தோறும் ஆவணி மாதம், 7, 8, 9 ஆகிய தேதிகளில் காலை, 6 மணி முதல், 6.30 மணி சூரிய உதயத்தில் துவங்கி, சூரிய ஒளி கோவிலில் முன் மண்டபம் வழியாக படிப்படியாக நகர்ந்து, கருவறையில் உள்ள மூலவர் சிலையின் நெற்றிப்பொட்டில் திலகம் இட்டது போல் ஜொலிக்கும். இந்த நிகழ்வை, சூரிய வழிபாடு என்று என்று புராணங்கள் கூறுகின்றன.
சூரியனே சிவனை பூஜை செய்து வழிபடுவதாக ஐதீகம் என்பதால், ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வர். நேற்று ஆவணி, 7ம் தேதி என்பதால், சிவலிங்கத்தின் மீது விழும் சூரிய வழிபாட்டை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். நேற்று காலை, 6 மணிக்கு சூரிய உதயமாகி காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள மூலவர் மீது சூரிய கதிர்கள் விழுந்தது. இந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசித்தனர். இதே போல் இன்றும், நாளையும் சூரிய கதிர்கள் மூலவர் மீது விழும் நிகழ்வு நடக்கும், என பக்தர்கள் கூறினர்.