பதிவு செய்த நாள்
01
செப்
2015
11:09
சேலம்: சேலம், ராஜகணபதி கோவில் உண்டியல் மூலம், 6.88 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. செப்.,17ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சேலம் ராஜகணபதி கோவிலின் உண்டியல், சுகவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் வைத்து எண்ணப்பட்டது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் சூரியநாராயணன், சுகவனேஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் கிருஷ்ணன், ஆய்வாளர் மகாவிஷ்ணு, கண்காணிப்பாளர் உமாதேவி, தலைமை எழுத்தர் வன்னியர் திலகம் ஆகியோர் முன்னிலையில், ஜெய்ராம் கல்லூரி மாணவர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கடந்த முறை உண்டியல் எண்ணப்பட்ட போது கிடைத்த தொகையை விட, தற்போது உண்டியல் வருவாயில், 61 ஆயிரத்து, 183 ரூபாய் சரிவு ஏற்பட்டது. நேற்று உண்டியல் எண்ணும் பணி அனைத்தும் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்.,17ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதால், அடுத்த முறை உண்டியல் எண்ணப்படும் போது கோவிலின் உண்டியல் வருவாயில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவிலின் உண்டியல் வருவாயில் சரிவு எதுவும் ஏற்பட வில்லை. வழக்கமாக இரண்டு மாதம்,இடைவெளியில் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, எண்ணப்பட்டதில், எதிர்பார்த்ததை விட வருவாய் அதிகரித்தே காணப்பட்டது. கடந்த முறையை விட வெள்ளி, வெளிநாட்டு கரன்சி, ரியால் ஆகியவற்றின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.