பதிவு செய்த நாள்
20
ஜூலை
2011
12:07
நாமக்கல்: எலுவம்பட்டி ஓலைப்பிடாரி அம்மன் கோவிலில், 30 ஆண்டுகளுக்கு பின் நேற்று, காப்புகட்டுதலுடன் தேர்த்திருவிழா துவங்கியது.நாமக்கல் அடுத்த பழையபாளையம் எலுவம்பட்டி கிராமத்தில், ஓலைப்பிடாரி அம்மன் கோவில் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன், பல்வேறு பிரச்னை காரணமாக தேர்த்திருவிழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தேர்த்திருவிழா நடத்த கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் முடிவு செய்தனர். நேற்று இரவு 10 மணிக்கு காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, தினமும் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்கு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. 26ம் தேதி மாலை வடிசோறு வைத்து அம்மனக்கு படையல் வைக்கப்படுகிறது. 27ம் தேதி இரவு 7 மணிக்கு, மாவிளக்கு பூஜை, ஸ்வாமி தேரில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து எல்லை சட்டி உடைத்தல், ஊமை பலி கொடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.வரும் 28ம் தேதி காலை 8 மணிக்கு பொங்கல் பூஜையும், ஸ்வாமி திருவீதி உலா வரும்போது, பலி பூஜையும் செய்யப்படுகிறது. 29ம் தேதி இரவு 8 மணிக்கு பழையபாளையம் பகவதியம்மன் கோவில் திடலில் வாணவேடிக்கை நடக்கிறது. 30ம் தேதி காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், ஸ்வாமி திருவீதி உலா முடிந்தபின், பலி பூஜையும் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும், கரகம் குடிபுகுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து, 8 நாட்களுக்கு கோவில் நடை சாற்றப்படுகிறது.ஆகஸ்ட் 7ம் தேதி உதிரவாய் துடைத்தல் நிகழ்ச்சியும், 8ம் தேதி சிறப்பு பூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.