திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கடந்த வாரம் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் வீதியுலா நடந்து வந்தது. நேற்று காலை தேர் திருவிழாவையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன், அலங்கரிக்கப்பட்ட தேரில் தேரோட்டம் துவங்கியது. காலை 11:00 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். மாலை சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று தீ மிதி திருவிழா நடக்கிறது.