பதிவு செய்த நாள்
08
செப்
2015
11:09
மாமல்லபுரம்: மாமல்லபுரம், நவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. மாமல்லபுரம், ருக்மணி பாமா சமேத நவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் முக்கிய உற்சவமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், நேற்று முன்தினம் மாலை, வாசுதேவர் கண்ணனை ஆயர்பாடிக்கு எழுந்தருள வைத்து, சிறப்பு திருமஞ்சனத்துடன் துவங்கியது. நேற்று ஆலிலை கண்ணனாக தோன்றி, திருமஞ்சனம் நடந்தது. இதேபோன்று, தினமும் மாலை, 3:00 மணிக்கு, அவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்து, திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இன்று, வெண்ணைத்தாழி கண்ணன்; நாளை, கோவர்தணகிரி; நாளை மறுநாள், சகடாசூர வதம்; 10ம் தேதி, வேணுகோபால கண்ணன்; 11ம் தேதி, ஏணிக்கண்ணன்; 12ம் தேதி, காளிங்க நர்தனம்; 13ம் தேதி, ஊஞ்சல் கண்ணன்; 14ம் தேதி, கிருஷ்ணர் லீலை; 15ம் தேதி, குழல் ஊதும் கண்ணன் என, காட்சி அளிக்கிறார். இறுதிநாள் உற்சவமாக, 16ம் தேதி காலை, 9:00 மணிக்கு, உறியடி கண்ணனுக்கு திருமஞ்சனம்; பகல் 2:00 மணிக்கு, கோலாட்ட பஜனை; மாலை, 5:00 மணிக்கு, சிறப்பு வழிபாடு மற்றும் உறியடி உற்சவம் நடைபெறும். உற்சவத்தை முன்னிட்டு, தினமும் ஒரு தலைப்பில் இரவு, 7:00 மணிக்கு, உபன்யாசம் நடைபெறும்.