மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு மெகா சைஸ்’ கொழுக்கட்டை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2015 10:09
திருச்சி மலைக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை பிள்ளையாருக்கு படைத்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்துக்களின் முழு முதற்கடவுளாக விளங்குபவர் விநாயகப்பெருமான், ஒவ்வொரு ஆண்டும் ஆவணிமாதம் சதுர்த்தி தினத்தன்று விநாயகப்பெருமானின் பிறந்தநாள் எனப்படுவதால் இந்நாளை விநாயகர் சதுர்த்தியென்று இந்துக்கள் கொண்டாடுவர். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் உள்ள விநாயகர்களுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெற்றது. திருச்சியில் பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கும், கீழே உள்ள மாணிக்க விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையாருக்கு பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு, நெய், தேங்காய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 150 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கொழுக்கட்டைகள் நைவேத்தியம் செய்யப்பட்டது. முன்னதாக பிரம்மாண்டமான கொழுக்கட்டையை தொட்டிலில் வைத்து கீழே இருந்து உச்சி பிள்ளையார் கோயில் வரை கோயில் பணியாளர்கள் சுமந்து வந்தனர். அதன்பின்னர் படைக்கப்பட்ட கொழுக்கட்டையானது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் விநாயகரை தரிசனம் செய்தனர்.