பதிவு செய்த நாள்
19
செப்
2015
02:09
திருப்பூர்: புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, அவிநாசிபாளையம் ராமசாமி கோவிலுக்கு,
திருப்பூர் மண்டலத்தில் இருந்து, 19.9.15, 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழ் மாதங்களில் பெருமாளுக்கு உகந்ததாக, புரட்டாசி கருதப்படுகிறது. இம்மாதத்தில் வரும் சனிக்கிழமை மிகவும் விசேஷமானவை. அவிநாசி ஒன்றியம், ஆலத்தூர் ஊராட்சி, மொண்டி பாளையத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில், அதிகாலை, 3:30 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, 4:00 மணிக்கு பெருமாளுக்கு மகாபிஷேகம், திருமஞ்சனம், இரவு, 7:30 மணிக்கு மெரவனை துவக்கம், புஷ்ப பல்லக்கில் கருட வாகனத்தில் பெருமாள் பிரகார உலா ஆகியன நடக்கின்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
மங்கரசவலைபாளையம் ஊராட்சி, தாளக்கரையில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிங்க பெருமாள்
கோவிலில், அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம், அலங்கார ஆராதனை நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு, இரவு, 7:00 மணிக்கு சிறப்பு பூஜை, பஜனை நடக்கின்றன.
அவிநாசி கரிவரதராஜ பெருமாள் கோவில், கருவலூர் கருணாகர வெங்கட்ரமண பெருமாள்
கோவில், அவிநாசி ஷீரடி சாய்பாபா கோவில், திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெருமாள்
கோவில்களிலும், புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு நடக்கிறது.
சிறப்பு பஸ் இயக்கம்திருப்பூர் - தாராபுரம் ரோட்டில் உள்ள அவிநாசிபாளையத்தில், 200 ஆண்டு
பழமைவாய்ந்த, ராமசாமி கோவில் உள்ளது; ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமை மட்டும்
திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடத்துவது வழக்கம். தாராபுரம், குடிமங்கலம், பொள்ளாச்சி, பெதப்பம்பட்டி, கோவை, அவிநாசி, சூலூர், கருமத்தம்பட்டி, கோபி, அந்தியூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ராமசாமி கோவிலுக்கு, புரட்டாசி சனிக்கிழமைகளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர்.
புரட்டாசி முதல் சனிக்கிழமையான 19.9.15-ல் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக, திருப்பூர் மண்டலத்தில் இருந்து, 25 சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்குகிறது. அதிகாரிகள் கூறுகையில், "திருப்பூரில் இருந்து, 15; காங்கயம், பல்லடத்தில் இருந்து தலா, ஐந்து என மொத்தம், 25 பஸ்கள் இயக்கப்படும். பயணிகள் கூட்டம் அதிகரித்தால், கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்களில், வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும், என்றனர்.