பதிவு செய்த நாள்
21
செப்
2015
12:09
தஞ்சாவூர்: மகாமக திருவிழாவின்போது கும்பகோணம் வழியாக, 15 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும்,” என, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அகர்வால் தெரிவித்தார். கும்பகோணத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மகாமகத் திருவிழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் முதல், மயிலாடுதுறை வரை உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதிகள் செய்யப்படும். கும்பகோணத்தில் இரண்டாவது நடைமேடையில் பயணிகள் அமருவதற்கு ஏற்ற வகையில் நிழற்குடை அமைக்கப்படுகிறது. ரயில் நிலையம் முன், பயணிகள் அமருவதற்கு பந்தல் அமைக்கப்படும். மகாமகத்தை முன்னிட்டு, ரயில்வே துறை சார்பில், ஒன்பது கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மகாமகத் திருவிழாவிற்கு பக்தர்கள் வந்து செல்வதற்காக, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை இடையே, 15 நிமிடங்களுக்கு ஒரு முறை, கும்பகோணம் வழியாக ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.