பதிவு செய்த நாள்
22
செப்
2015
12:09
வைணவ ஆச்சாரியார்களில் ஒருவரான சுவாமி தேசிகன், திருப்பதி வெங்கடேச பெருமாளின் ஆராதனை மணியின் அம்சம் கொண்டவர். இவர் காஞ்சிபுரம் அனந்த சூரி, தோதாரம்மாள் தம்பதிக்கு புரட்டாசி திருவோண நன்னாளில் மகனாக அவதரித்தார். இவருக்கு வேங்கடநாதன் என்று பெயரிட்டனர். அப்புள்ளான் என்னும் குருநாதரிடம் கருட மந்திர உபதேசம் பெற்ற இவர், அதை ஜபம் செய்து கருடனின் தரிசனம் பெற்றார். கருடனிடம், ஹயக்ரீவ மந்திர உபதேசம் பெற்றார். அதை ஜபித்து ஹயக்ரீவரை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றார். ஸ்ரீரங்கத்தில் தேசிகனுக்கும், பண்டிதர் ஒருவருக்கும் யார் சிறந்தவர் என்ற விவாதம் ஏற்பட்டது. அதன் முடிவாக, பெருமாளே ஒரு அர்ச்சகரின் மேல் ஆவேசமாகத் தோன்றி, அன்றிரவு இருவருக்கும் பாட்டு போட்டி நடத்துவது என்றும், யார் விடிவதற்குள் ஆயிரம் ஸ்லோகம் பாடுகிறாரோ அவரே வெற்றி பெற்றவர் என்றும், அவருக்கு கவிதார்க்கிக சிம்மம் என்று சிறப்பு பட்டம் அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். பண்டிதர் பதகமல சகஸ்ரம் என்னும் பெயரில் பாடத் தொடங்கினார். அவரால் 300 ஸ்லோகம் மட்டுமே பாட முடிந்தது. சுவாமி தேசிகனோ ரங்கநாதரின் பாதுகை குறித்து பாதுகா சகஸ்ரம் என்னும் தலைப்பில் 1000 ஸ்லோகங்களை மடை திறந்த வெள்ளமாகப் பாடி முடித்தார். போட்டியில் வென்ற சுவாமி தேசிகனுக்கு பட்டம் அளிக்கப்பட்டது. அந்நியப் படையெடுப்பின் போது, ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள உற்சவரான நம்பெருமாளை (வைகுண்ட ஏகாதசியன்று பரமபதவாசல் கடப்பவர்) பாதுகாத்த பெருமை இவருக்கு உண்டு. முதுமை வரை, பிள்ளை லோகாச்சாரியாருடன் சேர்ந்து ரங்கநாதருக்கு தொண்டாற்றினார். சிற்ப சாஸ்திரத்தில் கைதேர்ந்தவரான இவர், தன் திருவுருவத்தை தானே சிலையாக வடித்தார். இந்தச் சிலை கடலுõர் மாவட்டம் திருவஹீந்திரபுரம் தேவநாத பெருமாள் சன்னிதியில் உள்ளது. இவர் வடமொழி ஸ்தோத்திரங்களையும், தமிழில் தனியன் பாடல்களையும், வாழி திருநாமங்களையும் பாடியுள்ளார். நுõறு ஆண்டு வாழ்ந்த இவர், ராமானுஜரின் கொள்கைகளை விளக்கியும் நுõல்கள் இயற்றினார். இவரது காலத்திற்குப் பிறகு, சீடர்கள் 12 பேர் குருவின் கொள்கைகளை பரப்பினர். இவரது குருபூஜை புரட்டாசி திருவோணத்தன்று (செப்.24) நடக்கிறது. மாணவர்கள் இவரை வணங்கினால் கல்வியில் முன்னிலை பெறுவர்.