பதிவு செய்த நாள்
22
செப்
2015
12:09
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகிலுள்ள தஞ்சாக்கூரின் சிறப்பு குறித்து காஞ்சிப்பெரியவர் விளக்கியுள்ளார். ஒருமுறை, தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையர் காஞ்சிப் பெரியவரைத் தரிசிக்க வந்திருந்தார். தமிழ் இலக்கியம் குறித்த ஆராய்ச்சி பற்றி அவரிடம் பேசினார். தஞ்சைவாணன் கோவை என்னும் இலக்கிய நுõல் பற்றி பேச்சு எழுந்தது. வள்ளலான தஞ்சைவாணன் அரண்மனையில் இல்லாத நேரத்தில், புலவர்கள் சிலர் வந்தனர். ராணி மட்டும் அரண்மனையில் இருந்தாள். இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட அவள், அவர்களைப் பாடச் சொல்லி கேட்டாள். மன்னரைப் போல தானும் வள்ளல் குணம் கொண்டவள் என்பதை உணர்த்த, ஒவ்வொரு பாட்டு முடிந்ததும் தாம்பூலம் அளித்தாள். வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம் வைத்து மரியாதை செய்வது தாம்பூலம். ராணி தாம்பூலத்தில் சாதாரண தேங்காய்க்கு பதில் தங்க தேங்காயைக் கொடுத்தாள். புலவர்கள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர். அந்த நேரத்தில் தஞ்சைவாணன் அரண்மனைக்கு திரும்பினான். ராணி அளித்த சன்மானத்தைக் கண்டு கோபம் கொண்டான். யாருக்கு எப்படி சன்மானம் கொடுப்பது என்று தெரிய வேண்டாமா?என்று மனைவியை ஏசினான். புலவர்களிடம் இருந்த தங்க தேங்காயை திருப்பி வாங்கிக் கொண்டு, கருவூலத்தில் இருந்து உங்களுக்கு ஏற்றபடி சன்மானம் வரும் வரை காத்திருங்கள், என்று சொல்லி புறப்பட்டான். கிடைத்ததை இழந்த புலவர்கள் அடுத்த சன்மானத்திற்காக காத்திருந்தனர். சிறிதுநேரத்தில், தஞ்சைவாணன் சன்மானத்தைக் கொடுத்தான். தங்க தேங்காய்க்கு பதிலாக ரத்தினக்கல் பதிக்கப்பட்ட தேங்காய்கள் இருந்தன. இப்படி தஞ்சைவாணன் பெருமையைச் சொல்லி மகிழ்ந்த உ.வே.சா., தஞ்சைவாணன் ஆட்சி நடத்திய பகுதி பாண்டிய நாட்டில் மானாமதுரை அருகில் தஞ்சாக்கூர் என்பதற்கான சாட்சி இருப்பதாகவும் தெரிவித்தார். காஞ்சிப்பெரியவர் அதனை உண்மை என்று சொல்லி, அதற்கான சாட்சியம் காஞ்சி மடத்தில் இருப்பதாக அவரிடம் தெரிவித்தார். சிவகங்கை மன்னர், தஞ்சாக்கூருக்கு தெற்கிலுள்ள புலவர்சேரி என்ற கிராமத்தை காஞ்சி மடத்திற்கு தானமாக அளித்ததாகவும், அதற்கான சாசனத்தில் இதற்கான ஆதாரம் இருப்பதாகவும் கூறினார். தஞ்சைவாணனிடம் சன்மானம் பெற வந்த புலவர்கள் தங்கியிருந்ததால், அந்த கிராமத்திற்கு தஞ்சாக்கூர் என பெயர் வந்ததாகவும் கூறினார். காஞ்சிப்பெரியவர் வடமொழி போல, தமிழிலும் புலமை பெற்றிருந்ததை உ.வே.சா., புரிந்து கொண்டார். (மகான் காஞ்சிப் பெரியவர்)