பதிவு செய்த நாள்
25
செப்
2015
12:09
ஊத்துக்கோட்டை : பவானியம்மன் கோவிலில், திரளான பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பெரியபாளையம் பவானியம்மன் கோவி லில், 14 வாரங்கள் நடக்கும் ஆடி விழாவில் வியாபாரிகள், பவானி நகர், தண்டுமாநகர், ராள்ளபாடி, அரியப் பாக்கம், அருந்ததி நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள், ஒவ்வொரு ஆண்டும் பால்குடம், அலகு குத்துதல் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். இந்தாண்டு, 25ம் ஆண்டாக, நேற்று முன்தினம் இரவு, இவ்விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள தர்மராஜா கோவிலில் இருந்து, திரளான பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், அலகு குத்திக் கொண்டும் பவானியம்மன் கோவிலுக்கு வந்தனர். அங்கு பக்தர்கள் எடுத்து வந்த பால், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கரகாட்டம், ஒயிலாட்டம், பம்பை உடுக்கை, மேததாளம் முழங்க, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.