பதிவு செய்த நாள்
25
செப்
2015
12:09
ஈரோடு: ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோற்சவம் நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா கடந்த, 17ம் தேதி கிராம சாந்தியுடன், விழா துவங்கியது. அதன் பின், ஸ்வாமி அன்னபஷி, சிம்ம, அனுமந்த, கருட, யானை வாகனத்தில் காட்சியளித்தார். கடந்த, 23ம் தேதி திருக்கல்யாணமும், புஷ்ப பல்லக்கில் வீதியுலா காட்சியும் நடந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கஸ்தூரி அரங்கநாதர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று காலை, 9 மணிக்கு நடந்தது. முன்னதாக யாக சாலை பூஜை, ஸ்வாமி தேரில் எழுந்தருளுதல் நடந்தது. பின்னர் கோவில் முன் நின்றிருந்த தேரை, பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா... என்ற கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, ப.செ.பார்க், கச்சேரி வீதி வழியே மீண்டும் கோவிலை சென்றடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு நகரில் ஆங்காங்கே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மின்சார வாரியத்தினர், ரோட்டின் குறுக்கே செல்லும் மின்சார ஒயர்களை சிறிது நேரம் அகற்றி, தேர் செல்ல வழிவகுத்தனர். தேர் சென்ற பின், மீண்டும் மின் இணைப்புகள் சரி செய்யப்பட்டன. தேரோட்டத்தை முன்னிட்டு செங்குந்தர் திருமண மண்டபத்தில் அன்னதானம் நடந்தது. இன்று இரவு, 7 மணிக்கு பரி வேட்டையும், நாளை, இரவு, 7 மணிக்கு தெப்ப உற்சவமும் நடக்கிறது. விழா, 27ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. கோவில் செயல் அலுவலர் விமலா, உதவி ஆணையர் முருகையா ஆகியோர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.