பதிவு செய்த நாள்
25
செப்
2015
12:09
சென்னிமலை: சென்னிமலை முருகனுக்கு கோவில் அர்ச்சகர்கள் சங்கமான, ஆதிசைவ அர்ச்சக அறக்கட்டளை சார்பில், ஸ்ரீசென்னிமலை ஆண்டவர் பாதயாத்திரை தீர்த்தாபிஷேக விழா குழுவை செயல்படுத்தி வருகின்றனர். இக்குழு சார்பில், 16வது ஆண்டு விழாவாக நேற்று முன்தினம் துவங்கியது. பவானி சென்று, நதிக்கரையில் தீர்த்தம் முத்தரித்து, பாதயாத்திரையாக சென்னிமலை நகருக்கு வந்தனர். பின், கைலாச நாதர் கோவிலில் தங்கி, நேற்று காலை, 6 மணிக்கு தீர்த்தக் குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, மலை கோவிலை சென்றடைந்தது. அங்கு விநாயகர் வழிபாடு, கலச ஆவாஹனம், ஹோமம், த்ரவியாகுதி, மஹாபூர்ணாகுதி, தீர்த்தாபிஷேகம் செய்து, சென்னிமலை முருகனுக்கு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. கூனம்பட்டி ஆதினம் இளவரசு சரவணமாணிக்க வாசக ஸ்வாமிகள் அருளாசி வழங்கினார். மலை அடிவாரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆதிசைவ அர்ச்சக அறக்கட்டளை நிர்வாகிகள் தபராஜ் குருக்கள், ராஜாப்பா குருக்கள், சிவராஜ் குருக்கள், ரவிக்குருக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.