மேட்டுப்பாளையம்: திம்மராயப் பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். காரமடையை அடுத்த கா.புங்கம்பாளையத்தில் திம்மராயப் பெருமாள் கோவில் உள்ளது. இது மிகவும் பிரிசித்தி பெற்ற ஸ்தலமாகும். புரட்டாசி திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, இக்கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அலங்கார பூஜையுடன், திம்மராயப்பெருமாள் சுவாமிக்கும், பூமிதேவி, மீனாதேவிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. புங்கம்பாளையம் பிருந்தாவன பஜனைக்குழு, காரமடை சந்தான வேணுகோபால பஜனைக்குழு, ஆதிமாதையனுார் பனப்பாளையம் பஜனைக்குழுவினரின், பஜனையுடன் அம்மன் அழைப்பு நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. கோவில் தலைமை அர்ச்சகர் அனந்தகிருஷ்ணன், திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைத்தார். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதமும், தாலிக்கயிறும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மதியம் கருட வாகனத்தில் பெருமாள் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் அறக்கட்டளை குழுவினர் ஆகியோர் செய்திருந்தனர்.