பதிவு செய்த நாள்
29
செப்
2015
12:09
எப்ப பாருங்க... அந்த வீட்டிலே புருஷன், பெண்டாட்டி சண்டை, பிள்ளைகளும், பெத்தவங்களும் சண்டை, அக்கா, தங்கச்சிக்குள் அறவே ஆகது. அண்ணனும், தம்பியும் கீரியும் பாம்பும் மாதிரி...இப்படி சில வீடுகளைப் பற்றி பேச்சு அடிபடும். இந்த சண்டையில் இருந்து விடுதலை பெற மகாளய பட்சம் என்னும் 15 நாட்கள் பயிற்சி எடுத்தால் போதும்.பிதுர்களை வணங்கும் புண்ணிய காலம் மகாளயபட்சம் ஆகும். இந்த நாட்கள் பொதுவாக புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும். பவுர்ணமியை அடுத்த பிரதமை திதியில் தொடங்கி, அமாவாசையன்று மகாளயபட்ச காலம் நிறைவு பெறுகிறது. இந்த நாட்களில் நம் முன்னோர் நமக்கு ஆசிவழங்குவதற்காக பிதுர்லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். கருடபுராணம், விஷ்ணு புராணம், வராகபுராணம் போன்ற தெய்வீக நுõல்கள் இந்த பட்சத்தின் பெருமையைப் போற்றிக் கூறியுள்ளன. இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நாம் கலியுகத்தில் வாழ்வதால், அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. இந்த நாட்களில் நம் வீடுகளை மிக சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. அப்படி சண்டை போட்டவர்களெல்லாம் பழைய பகையை மறந்து விட வேண்டும். ஒற்றுமையாக இணைந்து ஏதேனும் தீர்த்தக்கரைக்கு போய் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து விட்டு வர வேண்டும். இதனால், சண்டை தீர்வதற்கான ஆசிர்வாதத்தை முன்னோர் செய்வர்.
இந்த காலத்தில், வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம் போன்ற கடற்கரைத் தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். காகத்திற்கு அன்னமிட வேண்டும். பசுவுக்கு புல், பழம், அகத்திக்கீரை கொடுக்க வேண்டும். நம் முன்னோர் படங்களுக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்ய வேண்டும்.இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது. ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் திருமாலே பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. தெய்வப்புலவர் திருவள்ளுவர் இல்லறத்தார் கடமைகளில் முதல் கடமையாக முன்னோர் வழிபாட்டைக் (தென்புலத்தார் வழிபாடு) குறிப்பிடுகிறார். திருமணத்தடை, புத்திரப்பேறு இன்மை, கடன்தொல்லை, மனக்கவலை, நவக்கிரக தோஷங்கள் என்று வாழ்வின் அனைத்து விதமான சிரமங்களையும் போக்கும் ஈடுஇணையற்ற பிதுர்வழிபாட்டினை இம்மகாளய புண்ணிய காலத்தில் செய்து பயனுடையதாக்குவோம்.