பதிவு செய்த நாள்
30
செப்
2015
10:09
மேலுார்: மேலுார் அருகே வெள்ளலுாரில், சிறுமிகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா நேற்று நடந்தது. நாளை (அக்., 1) தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவையொட்டி, 60 கிராமங்களை சேர்ந்த ஏழு சிறுமிகளை அம்மனாக பாவிக்க, செப்.,15ல் தேர்வு செய்யப்பட்டு, வெள்ளலுார் கோயில் வீட்டில் 15 நாட்கள் தங்கினர். இந்நாட்களில் மக்கள் எண்ணெய் தாளிதம் இன்றி விரதமிருந்தனர்.நேற்று கோயில் வீட்டில் இருந்து 11 பிரிவுகளை சேர்ந்த 22 அம்பலகாரர்கள் மற்றும் இளங்கச்சிகள்(இளைஞர்கள்) தலைமையில், 8 கி.மீ., துாரத்திலுள்ள கோயில்பட்டி ஏழைகாத்தம்மன் கோயிலுக்கு நடந்து சென்றனர். அதற்கு முன்பாக பெண்கள், தென்னங்குருத்தால் ஆன மதுக்கலயம் ஏந்தியும், உடலில் வைக்கோல் பிரி சுற்றியும், பதுமைகள், பூக்கொடைகளை சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், பூஜாரி சின்னத்தம்பி தலைமையில் அம்மனாக பாவிக்கும் ஏழு சிறுமிகள், கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அன்னதானம் நடந்தது. நாளை தேரோட்டம் நடக்கிறது.