பதிவு செய்த நாள்
25
ஜூலை
2011
11:07
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, ஆடிப் பரணியை யொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், காவடிகளுடன் வந்து முருகப் பெருமானை தரிசித்தனர். ஆடிக் கிருத்திகை விழா, ஆடி அஸ்வினி உடன், நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று, ஆடிப் பரணி முன்னிட்டு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருத்தணிக்கு வந்தனர்.பக்தர்கள் பால், பன்னீர், புஷ்ப, மயில் மற்றும் அன்னக்காவடிகளை தோளில் சுமந்து, மலைக் கோவிலுக்கு சென்று மூலவரை வழிபட்டனர். சில பக்தர்கள், தங்களது நேர்த்திக் கடனை தீர்க்க, உடலில் அலகுகள் குத்தி காவடி எடுத்தனர். மலைக் கோவிலில் பக்தர்கள் அதிகரித்ததால், மூலவரை தரிசிக்க, 6 மணி நேரம், வரிசையில் காத்திருந்தனர். சில பக்தர்கள் 100, 25 மற்றும் 15 ரூபாய் சிறப்பு டிக்கெட் வாங்கி விரைவு தரிசனம் செய்தனர்.விழாவை யொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. அதே போல் உற்சவர், ஆறுமுக சுவாமி, வள்ளி, தெய்வானை மற்றும் ஆபாத்சகாய விநாயகர் பெருமான் ஆகியோருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகளை கோவில், நகராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம் செய்திருந்தது. மாவட்ட எஸ்.பி., வனிதா தலைமையில், இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.பூ, பழம் மற்றும் தேங்காய் விலை விர்...: ஆடிக் கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழாவை யொட்டி, திருத்தணியில் பூ, பழம் மற்றும் தேங்காய் விலை திடீரென உயர்ந்ததால், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.ஆடிமாதம் என்றாலே பூ, வாழைப்பழம் மற்றும் தேங்காய் விலை ஏற்றம் அடையும். இந்நிலையில், திருத்தணியில் இரு நாட்களாக வழக்கத்திற்கு மாறாக பூ, பழம், கற்பூரம் மற்றும் தேங்காய் விலை மும்மடங்கிற்கு மேல் விற்கப்படுகிறது. காவடிகள் எடுத்து வரும் பக்தர்கள், பூ மாலை, கற்பூரம்,தேங்காய் மற்றும் பழம் போன்ற பொருட்களை அதிகளவில் வாங்குகின்றனர்.இரு தினங்களுக்கு முன், பூமாலை, 20 முதல் 60 ரூபாய் வரையும், தேங்காய், 7 முதல், 12 ரூபாய் வரை விற்றனர். ஆனால் நேற்று முன்தினம் முதல், பூ மாலை, 80 முதல் 200 ரூபாய் வரை (சிறியது) விற்கப்படுகிறது. ஒரு முழம் பூ, 10 ரூபாய்க்கு விற்கின்றனர். விலை உயர்வையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் போட்டி போட்டு வாங்குகின்றனர்.இந்த திடீர் விலை உயர்வால், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.