பதிவு செய்த நாள்
09
அக்
2015
11:10
மதுரை: நம் மனதில் வருத்தம், அசவுகரியத்திற்கு இடம் கொடுக்காமல், மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,” என ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் சீடரான ரிஷி நித்ய பிரக்யாஜீ கூறினார்.மதுரையில் ’வாழும் கலை’ அமைப்பு சார்பில் ’ஆனந்த லயம்’ நிகழ்ச்சியில், அவரது சொற்பொழிவு:நம் மனதில் வருத்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். நம் வாழ்க்கை ஒரு ராட்டினம் போன்றது. சில நேரம் மேலேயும், சில நேரம் கீழேயும் வருகிறோம். நம்முடைய தவறுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், அது நம்மை விட்டுச் செல்லாமல் இருந்து விடுகிறது. நம் மனதில் வருத்தம், அசவுகரியத்தை தவிர்த்து சந்தோஷத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இயற்கை நமக்கு எளிமையான வழியை கொடுத்திருக்கிறது; அது நமது மூச்சு. மற்றவர்கள் சொல்வதை கேட்க வேண்டும்; ஆனால், நம் மனம் என்ன சொல்லுகிறதோ, அதை செயல்படுத்த வேண்டும். மற்றவர்கள் உங்களைப் பற்றி எதுவும் நினைக்கலாம்; அந்த சுதந்திரத்தை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது, நீங்கள் தான் அதிகமான சுதந்திரத்தை அடைகிறீர்கள்.சுற்றி இருப்பவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என பயப்படும்போது நம் உள்உணர்வை கவனிக்காமல் விட்டு விடுகிறோம். உள் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பதன் மூலம் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும், என்றார்.பஜனை, பிரணாயாம பயிற்சி, தியானம் நடந்தது. ’வாழும் கலை’ ஆசிரியர்கள் தரணீதரன், அலமேலுமங்கை, ரஷ்னா பினானி, தன்னார்வ தொண்டர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.