சென்னிமலை : சென்னிமலை மேலப்பாளையம் ஆதிநாராயண பெருமாள் கோவில், திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் கலச பூஜை, சிறப்பு ஹோமம், சிறப்பு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து, கைலாசநாதர் கோவிலில் இருந்து, 42 நாதஸ்வரம், தவில், இசை கலைஞர்கள் பக்தி இசையுடன் சீர் வரிசை தட்டுகளுடன், ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதிகளில் வந்து மேலப்பாளையம் பெருமாள் கோவிலை வந்தடைந்தனர். அதை தொடர்ந்து திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் ஆதிநாராயண பெருமாள் அலர்மேல் மங்கை மற்றும் நாச்சியார் அம்மையுடன் திருவீதி உலா நடந்தது.பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை அக்னி நட்சத்திர வழிபாட்டு மன்றம் முருகன் அடிமை சுப்புசாமி தலைமையில் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சென்னிமலை சுற்று வட்டார பகுதி மக்கள், திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.