பதிவு செய்த நாள்
15
அக்
2015
12:10
திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரம் கட்ட, ஏற்கனவே போடப்பட்ட, டெண்டர் ரத்தான நிலையில், மீண்டும், டெண்டர் விடப்பட்டு உள்ளது.
அறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாக திகழ்கிறது, திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில். இங்கு, ராஜகோபுரம் இல்லாமல் இருந்தது. இந்து அறநிலையத் துறை மூலம், 2009ல், 3.60 கோடி ரூபாய் மதிப்பில், 158 அடி உயரம் கொண்ட, 9 நிலை ராஜகோபுரம் கட்டும் பணி துவங்கியது; 2011, ஜூலைக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது.
ஆனால், பல்வேறு நிர்வாக சிக்கல்களால், கோபுரத்தின் அடித்தள கட்டுமானமே, 2011, டிசம்பரில் தான் முடிவடைந்தது. கட்டுமான பொருள் விலை உயர்வு காரணமாக, ஒப்பந்ததாரர் பணியை பாதியில் கைவிட்டார்; 2013ம் ஆண்டு நவம்பரில், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.பின், 2014 பிப்ரவரியில், மறுஒப்பந்தம் விடப்பட்டு, ஆகஸ்ட் இறுதியில், கல்காரம் அமைக்கும் பணி முடிக்கப்பட்டது. பின், ராஜகோபுரம் கட்ட, கருத்துரு
தயாரித்து, ஜனவரியில் டெண்டர் விடப்பட்டது. கட்டுமானப் பொருள் விலை உயர்வால், யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. இப்போது, மீண்டும் டெண்டர் கோரப்பட்டு உள்ளது.இதுகுறித்து, அறநிலையத் துறை அதிகாரி கூறியதாவது: இந்த முறை ஒப்பந்த தொகையுடன், கட்டுமானப் பொருட்களின் இப்போதைய விலை நிலவரத்துக்கு ஏற்றபடி, கூடுதல் தொகை வழங்க உள்ளோம்; எனவே, டெண்டர் எடுக்க ஒப்பந்ததாரர்கள் முன்வருவர். ராஜகோபுர பணிக்கு, பக்தர்கள் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.