பதிவு செய்த நாள்
17
அக்
2015
10:10
சபரிமலை: சபரிமலை 18 படிகளில் புதிதாக ஐம்பொன் தகடு பதிக்கப்பட்டு ஐயப்பனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு தந்திரி மகேஷ் மோகனரரு தலைமையில், பக்தி பூர்வமான பிரதிஷ்டை பூஜையும், கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
சபரிமலை பயணத்தில் மிக புண்ணியமாக கருதப்படும் விஷயங்களில் 18 படிகளும் ஒன்று. காளைகட்டி, இஞ்சிப்பாறை மலை, புதுசேரிகானம்மலை, கரிமலை, நீலிமலை, சபரிமலை, பொன்னம்பலமேடு, சிற்றம்பலமேடு, மயிலாடும் மேடு, தலப்பாறை மலை, நிலக்கல்மலை, தேவர்மலை, ஸ்ரீபாதம்மலை, கர்கிமலை, மாதங்கமலை, சுந்தரமலை, நாகமலை, கருடன்மலை என 18 மலை தேவதைகள் குடிகொள்ளும் படியாக கருதப்படுகிறது. விரதமிருந்து இருமுடி கட்டுடன் செல்லும் பக்தர்கள் மட்டுமே இந்த படி வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் ஏறி செல்லும் படிகள் பழுதாகி விட்ட நிலையில், புதிதாக பஞ்சலோக தகடுகள் பதிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக புரட்டாசி மாத பூஜைகள் முடிந்தபோது செப்., 23-ம் தேதி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு படிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, பணிகளை தொடங்கி வைத்தார். 22 நாட்களில் பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு, நேற்று காலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக வழக்கமான மாத பூஜையை விட இரண்டு நாட்கள் முன்னதாக 15-ம் தேதி மாலை 5.30-க்கு நடை திறக்கப்பட்டது. அன்று படிகளுக்கு சுத்திகிரியைகள் நடைபெற்றது. நேற்று காலை ஐந்து மணிக்கு நடை திறந்த பின், 7.30 மணிக்கு கலசபூஜை நடைபெற்றது. ஒன்பது மணிக்கு படிகளுக்கு கீழே தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பூஜைகள் தொடங்கினார். பத்து மணிக்கு ஒவ்வொரு படிகளிலும் பூஜைகள் நடைபெற்று 10.30 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் சரணம் ஐயப்பா என்று பக்தி கோஷமிட்டனர். இதற்கு முன், 1985-ல் இதுபோல படிகளுக்கு ஐம்பொன் பிரதிஷ்டை நடைபெற்றது. 30 ஆண்டுகள் இடைவெளிக்கு பின், தற்போது படிகளுக்கு ஐம்பொன் பிரதிஷ்டை நடந்துள்ளது. பிரதிஷ்டை பூஜைகளுக்கு பின், நேற்று இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மீண்டும் ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5.30-க்கு நடை திறக்கிறது. 22-ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.