பதிவு செய்த நாள்
17
அக்
2015
10:10
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், உலகளந்த பெருமாள் மூலவர் திருவிக்ரமனுக்கு, 3.5 கிலோ வெள்ளியால் உருவாக்கப்பட்டுள்ள திருப்பாதம் அணிவிக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுாரில், உலகளந்த பெருமாள் மூலவர் திருவிக்ரமனாக பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். பஞ்சவர்ண திருமேனியால் ஆன பெருமாளுக்கு, மேலும் மெருகுசேர்க்கும் வகையில், பக்தர் ஒருவர் 3.5 கிலோ வெள்ளியில் உருவான, கற்கள் பதிக்கப்பட்ட திருப்பாதத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார். மகாபலி சக்ரவர்த்தியின் ஆணவத்தை அடக்க பகவான் மூன்றடி மண் கேட்டு, ஒரு அடி பூமியையும், மற்றொரு அடி ஆகாயத்தையும் அளந்துவிட்டு, மற்றொரு அடியை எங்கே வைப்பது என கேட்க, கர்வத்தை உணர்ந்த மகாபலி தனது தலையை குனிந்து வணங்கினார் என்பது ஐதீகம். இதன்படி, மூலவர் திருவிக்ரமன் ஒரு காலை மேலே துாக்கியவாறும், மற்றொரு காலை தரையில் வைத்தவாறு திருவிக்ரமனாக அருள் பாலிக்கிறார். இரண்டு பாதங்களுக்கும் பொருந்தும் வகையில் பக்தரால் வழங்கப்பட்டுள்ள கற்கள் பதித்த வெள்ளி திருப்பாதத்தை, நாளை காலை, சிறப்பு பூஜைகளுக்கு பின், சுவாமிக்கு அணிவிக்கப்படுகிறது. ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், இவ்வைபவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.