திருச்சி: திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் காவிரியில் துலா ஸ்நானம் புண்ணிய நீராடுதல் பெருவிழா நாளை (அக்.,18) நடக்கிறது.ஐப்பசியில் காவிரியில் நீராடுவது கங்கையில் நீராடுவதற்கு சமம் என புராணங்கள் சொல்கின்றன. குடகிலிருந்து புறப்பட்டு பூம்புகாரில் கடலில் கலக்கும் வரை இப்புண்ணிய நதிக்கரையில் மூன்று இடங்கள் விசேஷமான தீர்த்தக் கட்டங்கள் ஆகும். அதில் முதன்மையானது திருப்பராய்த்துறை. ஐப்பசி முதல் நாளில் திருப்பராய்த்துறையிலும், கடைசி நாளில் மயிலாடுதுறையிலும் காவிரி நீராட்டம் விசேஷமானது. இதில் நீராடி சிவமூர்த்தங்களை வழிபடுவோர்க்குத் துன்பம் நீங்கி இன்பம் பெருகும் என்பது ஐதீகம். நாளை அதிகாலை சூர்யோதய காலத்தில் திருப்பராய்த்துறை பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேஸ்வரர் அகண்ட காவிரிக்கு ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பார். தீர்த்தவாரி காலை 6.30 மணி முதல் 7 மணி வரை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி செய்துள்ளார்.