தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2011 11:07
தூத்துக்குடி : தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. கொடியேற்றத்தினை முன்னிட்டு நேற்று மாலையில் கொடிப்பவனி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பங்கு இறைமக்கள் கலந்து கொண்டனர்.திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் மாதா என்று அழைக்கப்படும் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் உலகப்புகழ் பெற்றதாகும். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போற்றப்படும் போப் ஆண்டவரால் பனிமய மாதா பேராலயத்திற்கு "பசிலிக்கா என்ற உயரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டு பெருமைபடுத்தப்பட்டுள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்களுக்கு பங்குமக்களால் நடத்தப்படும் பேராலய திருவிழா தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தாண்டிற்கான பேராலய பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலையில் கொடிப்பவனி நடந்தது. திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து மாலை 6 மணிக்கு காணிக்கை பவனி நடந்தது. இந்த காணிக்கை பவனியின் போது எளியோர், திருவழிப்பாடு, பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை இறைமக்கள் காணிக்கையாக அளித்தனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த கொடிப்பவனி பனிமய மாதா பேராலயத்தை வந்தடைந்தது. இதில் பங்கு தந்தைகள், பங்கு இறைமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.பனிமய மாதா பேராலயத்தின் 429வது ஆண்டு பேராலய பெருவிழாவின் தொடக்க நாள் நிகழ்ச்சியாக இன்று காலை கொடியேற்றம் நடக்கிறது. இதனை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு மூன்றாம் திருப்பலி நடக்கிறது. 7.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டு திருப்பலியும் அதனை தொடர்ந்து திருக்கொடியேற்றமும் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு சலேசிய மாநில சபைத் தலைவர் ஆல்பர்ட் ஜான்சன் தலைமையில் அன்னைக்கு பொன்மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு இளையோருக்கான திருப்பலியும், 7.15 மணிக்கு செபமாலை மற்றும் நற்கருணை ஆசீரும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை மற்றும் பங்கு இறைமக்கள் செய்துள்ளனர்.