மூலிகை பெயின்டிங்: பழமை மாறாமல் நடராஜர் கோவிலில் நவீன முறையில் ஓவியம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2015 10:10
சிதம்பரம்: நடராஜர் கோவிலில் சித்சபை பின்புறம் உள்ள பழமையான மூலிகை ஓவியங்களை 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பழமை மாறால் அதே வடிவில் மூலிகை பெயின்டிங் மூலம் தீட்டப்பட்ட புதிய ஓவியப் பலகைகள் பொருத்தப்பட உள்ளது. சிதம்பரத்தில் 500 ஆண்டுகளுக்கு முன் கட்ட ப்பட்ட பழமையான நடராஜர் கோவிலில் சித்சபை பின்புறம் உள்ள துணை மண்டபத்தில் தல வரலாறு ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது. ஆயிர ங்கால் மண்டபத்தில் நடராஜரின் நடனக் காட்சிகள் மேற்கூரையில் (சீலிங்கில்) ஓவியங்களாக மூலிகை வண்ணங்கள் மூலம் வரையப்பட்டுள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு கடந்த மே 1ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது ஓவியங்களை சுத்தம் செய்த போது வண்ணங்கள் குறைந்து சிதிலமடைந்து காணப்பட்டது. அதனால் பொது தீட்சிதர்கள் இந்த ஓவியங்கள் பழமை மாறால் நவீன முறையில் புதிய வடிவில் உருவாக்கி அதே இடத்தில் பொருத்த திட்டமிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, கோவில் முன்னாள் பொதுச் செயலர் பாஸ்கர தீட்சிதர் முயற்சியால் 10 லட்சம் ரூபாய் மதிப்பில், இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சென்னை திருவற்றியூரைச் சேர்ந்த பத்மவாசன், 45; என்பவர் புராதன ஓவியங்களை மூலிகை வண்ணங்களால் கடந்த 6 மாதங்களாக வரைந்துள்ளார். முன்பு வரையப்பட்டுள்ள ஓவியம் போன்று அதே வண்ணத்தில் நவீனமாக பிளைவுட் பலகையில் பல ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இதற்காக பிளைவுட் பூச்சி பிடிக்காத, நீண்ட காலம் உழைக்கும் வகையில் கேரளாவில் இருந்து வரவழைத்து செய்யப்பட்டுள்ளது. கேரளா மற்றும் சிங்கப்பூர் போன்ற இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பல வண்ண மூலிகை பெயின்டுகளால் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஓவியங்கள் 4க்கு3, 4க்கு4, 4க்கு6 என்ற 3 விதமாக 16 ஓவியப் பலகைகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓவியம் வரைந்த பின் அதன் மீது அழுக்கு, துாசி படியாமல் இருக்க சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட ‘அக்கர்லிக்’ என்ற சிறப்பு பிளாஸ்டிக் பேப்பர் மேல் பகுதியில் ஒட்டப் பட்டுள்ளது. கொலு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள ஓவியங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு சித்சபைக்கு பின்னால் உள்ள துணை மண்டபத்தில் பொருத்தப்பட உள்ளது. கோவிலில் உள்ள சிதம்பரம் சரித்திர ஓவியங்கள் அழிக்கப்படாமல் பழமை மாறாமல் மீண்டும் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது கோவில் தீட்சிதர்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.