பதிவு செய்த நாள்
31
அக்
2015
11:10
திருப்பதி: திருமலை மலைப்பாதையில், தொடர்ந்து மண் சரிவு ஏற்படுவதால், போக்குவரத்து பாதிக்கப்படுவதை தவிர்க்க, மூன்றாவது மலைப்பாதை அமைக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.திருமலை ஏழுமலையானை தரிசிக்க, முன்பெல்லாம் பாதயாத்திரை வழி மட்டுமே இருந்தது. 1944ல், தேவஸ்தானம், திருப்பதியில் இருந்து, மலைக்குச் செல்ல முதல் பாதையை அமைத்தது. இதில், இருவழி போக்குவரத்து நடந்து வருகிறது. 1973ல், இரண்டாவது மலைப்பாதை அமைக்கப்பட்டது. இதன் பின், திருப்பதியில் இருந்து திருமலைக்குச் செல்ல, இரண்டாவது மலைப்பாதை; திருமலையில் இருந்து திருப்பதிக்கு வர, முதல் மலைப் பாதை என பயன்பாட்டிற்கு வந்தது. மண் சரிவு: இரண்டாவது மலைப் பாதையில், 7 கி.மீ., வரை எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அதன் பின், 16 கி.மீட்டரை தொடும் வரை பாறைகள் நிறைந்துள்ளன. இதனால், மழைக் காலத்தில், அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, மூன்றாவது மலைப் பாதை துவக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
அன்னமய்யா மார்க்கம்: கடப்பா மாவட்டம், தாளபாக்கத்தில் பிறந்த அன்னமாச்சார்யா, திருமலை ஏழுமலையானை சென்று தரிசித்த பாதை, அன்னமய்யா மார்க்கம் என, அழைக்கப்படுகிறது. இந்த வழியில் மலைகள் இல்லாததால், திருப்பதியில் இருந்து, 30 கி.மீ., தொலைவில் உள்ள மாமண்டூர் என்ற இடத்தில் இருந்து எளிதாக திருமலையை சென்றடையலாம்.
தடை: ஆனால், மாமண்டூரில் இருந்து திருமலை எல்லை வரை உள்ள பகுதி, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில், அபூர்வமான மரங்கள், பறவைகள், வன விலங்குகள் உள்ளன. இதனால், அப்பகுதிக்குள் நுழைய பொது மக்களுக்கு அனுமதி இல்லை. எனவே, மூன்றாவது மலைபாதையை ஏற்படுத்துவது முடியாத செயல் என்பதால் தேவஸ்தானம், அத்திட்டத்தை கைவிட்டது.புது மார்க்கம்: இதற்கு பதிலாக, அலிபிரியில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து, 2 கி.மீ., தொலைவில் உள்ள வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா அருகே, புதிதாக கட்டப்பட்டு வரும் வெங்கடேஸ்வர சுவாமி கோவில் வரை, புதிய சாலை ஏற்படுத்தி, அங்கிருந்து, முதல் மற்றும், இரண்டாம் மலை பாதைக்கு இடையில் உள்ள இணைப்பு சாலை வழியாக, திருமலைக்கு வாகனங்களை அனுப்ப முடியும். இதன் மூலம், மண் சரிவு ஏற்படும் இடங்களை தவிர்க்க முடியும் என, நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, தேவஸ்தானம் பரிசீலித்து வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனத் தெரிகிறது.