பதிவு செய்த நாள்
04
நவ
2015
11:11
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் தடைசெய்யப் பட்ட இரட்டைமடி வலையில் சிக்கிய பேசாளை மீன் கழிவுகளால், அக்னி தீர்த்த கடலில் வீசிய துர்நாற்றம் பக்தர்கள் முகம் சுளிக்க வைத்தது. கடல் வளம், மீன் வளத்தை அழிக்கும் இரட்டைமடி, சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க மாநில அரசு தடை விதித்துள்ளது. ஆனால் ராமேஸ் வரத்தில் மீன்துறை அதிகாரிகள் ஆசியுடன் கடந்த சில மாதமாக நாட்டுபடகு மீனவர்கள் சுருக்குமடி வலைகளையும், விசைபடகு மீனவர்கள் இரட்டைமடி வலை களையும் பயன்படுத்தி மீன் பிடிப்பதை வழக்கமாக கொண் டுள்ளனர். இந்நிலையில் இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்துவிட்டு நேற்று காலை விசைபடகு மீனவர்கள் கரை திரும்பினர். ஒவ்வொரு படகிலும் 8 முதல் 10 டன் வரை பேசாளை மீன்கள் சிக்கியது. இவற்றை ஆயில் கம்பெனிகளுக்காக ஒரு கிலோ 10 முதல் 12 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கி துõத்துக்குடி, கன்னியா குமரிக்கு அனுப்பினர். அதிக படியான பேசாளை மீன் வரத்து மீனவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
அக்னி தீர்த்தம் அசுத்தம்: பேசாளை மீனின் வழுவழுப் பான கழிவுகள் அக்னிதீர்த்த கடலில் மிதந்ததால் புனித நீராடிய பக்தர்கள் உடலில் மீன் கழிவுகள் படிந்து துர்நாற்றம் வீசியது. இதனால் முகம்சுளித்த பக்தர்கள் பலர் நீராடாமல் திரும்பி சென்றனர். அக்னி தீர்த்தத்தில் நீராடிய கோவை பக்தர் பாதராஜ் 52, கூறுகையில், அக்னி தீர்த்தம் கழிவுகள் கலந்து கருப்பு நிறத்தில் உள்ளது. இதனுடன் மீன் கழிவும் சேர்ந்துள்ளதால் உடலில் படிந்து துர்நாற்றம் வீசுகிறது. குளிக்கவே அருவருப்பாக உள்ளது, என்றார். இந்து மக்கள் தலைவர் பிரபாகரன் கூறுகையில்,தடையை மீறி இரட்டைமடி, சுருக்கு மடியில் மீன்பிடிக்கும் படகுகள் மீது மீன்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. பேசாளை மீனில் வெளியேறிய கழிவுகள் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள் உடலில் படிந்ததால், பலர் குளிக்காமல் திரும்பி சென்றனர். அக்னி தீர்த்தம் சீரழிவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.