டில்லி; டில்லி வசந்த விஹாரில், சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் ஸ்ரீ சங்கர வித்யா கேந்திரா உள்ளது. இங்குள்ள ஸ்ரீ சாரதாம்பாள். ஈஸ்வரர் மற்றும் ஆதிசங்கரர் கோவில்களுக்கு, ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் நேற்று, தன் திருக்கரங்களால் கும்பாபிஷேகம் செய்து அருளினார். தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, தர்ம விஜய யாத்திரை-யில், டில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு விஜயம் செய்தார். அதைத் தொடர்ந்து ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி ஆற்றிய உரை: பாரத தேசத்தின் பரந்த நிலமான இமயம் முதல் குமரி வரை பல்வேறு கலாசாரங்களைக் கொண்டுள்ளது. ஜகத்குரு ஆதிசங்கரரின் சீடரான தோடகாச்சாரியார் குருபக்தியின் சிறப்பை விளக்க, தோடகாஷ்டகம்’ இயற்றினார். அது, குரு பக்தியின் உயர்வை விளக்குகிறது. பாரத மக்களின் வாழ்வில் ஆதி முதலே தர்மமே அடிப்படையாக இருக்கிறது. பிரம்மச்சாரி, ஆடவர், மகளிர் என அவரவர்க்கு பல்வேறு விதமான கடமைகள் இருப்பினும், அனைவருக்கும் பொதுவான அடிப்படை தர்மமே. தன்னைப்போலவே பிறரை எண்ணி, அடுத்தவருக்கு இன்னல் செய்யாமல், உதவி செய்வதே தர்மம். ஏற்றத்தாழ்வின்றி அனைவரும் குரு பாதம் பற்றி, தர்ம வழியில் நடப்போமாயின் சுகம் என்றும் நிலைபெற்றிருக்கும். எனவே, பாரத மக்கள் அனைவரும் தர்மத்தை அவரவர் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு சுவாமி அருளுரை வழங்கினார்.