பதிவு செய்த நாள்
12
நவ
2015
11:11
பொன்னேரி: பலத்த மழையால், அழகராயர் பெருமாள் கோவில் விமானம் இடிந்து விழுந்தது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், பராமரிப்பு இன்றி பாழடைந்து கிடக்கிறது. பொன்னேரி அடுத்த, கோளூர் கிராமத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகராயர் பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆழ்வார்கள் சன்னிதி, லட்சுமி நாராயணர் சன்னிதி, ஆஞ்சநேயர் சன்னிதி, கருடாழ்வார் சன்னிதி ஆகியவை உள்ளன. இங்கு, தினமும் ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில், தொடர் பராமரிப்பு இன்றி பாழடைந்து கிடக்கிறது. கோவில் வளாகம் முழுவதும் புதர்மண்டி கிடக்கிறது. கட்டட சுவர்களில் செடிகள் வளர்ந்தும், வர்ணம் மங்கியும் உள்ளது. கடந்த சில தினங்களாக, கோளூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த, 10ம்தேதி இரவு பெய்த பலத்த மழையால், மூலவர் விமானம் இடிந்து உள்புறம் விழுந்தது. அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பழமை வாய்ந்த கோவிலை புனரமைக்க வேண்டும் என்பதே கிராமவாசிகளின் எதிர்பார்ப்பு.